இன்றைய உலகில் இனவொற்றுமை, இனமானம், இனவிடுதலை அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் இறைமையை பாதுகாக்க அமைத்த மந்திரங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 377

இன்றைய உலகில்  தனியாளை அல்லது அவர் சார்ந்த அமைப்பை பெரிதாக்க மக்கள் முயல்கின்ற நேரம் எல்லாம் மக்கள் தங்கள் மக்கள் இறைமையை இழத்தல் என்பது சமகால அரசியல் வரலாறாக உள்ளது. அமெரிக்காவை மீண்டும் பெரிதாக்குதல் என்ற கோசத்துடன் அமெரிக்க மக்களால் இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்த இன்றைய அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நடைமுறையில் “சீனாவையே டொனால்ட் ட்ரம்ப் பெரிதாக்குகிறார்” எனப் பிரித்தானியாவின் “த கார்டியன்” 05.02.2026ம் ஆண்டின் ஆங்கில நாளிதழில், ‘ஸ்ரீவன் கிறீன்ஹவுஸ்’ அவர்கள் எழுதிய கட்டுரை எவ்வாறு “ அரசத்தலைவரின் கொள்கைகள் அமெரிக்காவின் போட்டியிடும் நிலையைப் பலவீனப்படுத்தி அமெரிக்காவின் கூட்டணியினராலும் கூட சீனாவின் முன்னேற்றங்களில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்த இயலாத நிலையை நடைமுறையாக்கி உள்ளது என்பதை சான்றாதாரங்களுடன் எடுத்து விளக்கியது.
அமெரிக்க அரசத்தலைவரின் தன்னை மேம்படுத்துவது தவிர்ந்த எந்த அமெரிக்கா முதல் என்ற வகையிலான செயற்பாடுகளும் அமெரிக்காவை மேம்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பிய ஸ்ரீவன் கிறீன்ஹவுஸ் அமெரிக்க மக்களுக்கு ட்ரம்பின் எந்த நழுவல்தன்மையுடன் கூடிய படைத்துறை நடவடிக்கைகளும் சூழ்ச்சிகளும் எதாவது ஒரு தேசத்தை பெரிதாக்குகிறதென்றால் அது அமெரிக்காவல்ல சீனாவே என அவ்வாய்வில் தெளிவாக விளக்கியுள்ளார்.
21 நாடுகளில் 26000 மக்களிடை மேற்கொள்ளப்பட்ட அளவைகள் அமெரிக்கக் கொள்கைகள் சீனாவைப் பெரிதாக்கியதுமல்லாமல் அமெரிக்காவின் கூட்டணியினரையும் கூட அமெரிக்காவில் இருந்து வெகுதூரம் தள்ளிப்போக வைத்துள்ளதை ஐரோப்பிய வெளிவிவகாரத் தொடர்புப் பிரிவுக்குத் தெளிவாக்கியுள்ளது. இது குறித்து ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திமோத்தி கார்டுன் அஸ் அவர்கள் ட்ரம்ப் அரசியலில் சீனாவைப் மீண்டும் பெரிதாக்க வேண்டுமென்று எதனையும் செய்யவில்லை ஆனால் இந்தப் புள்ளிவிபரங்கள் அவ்வாறு உலகம் பார்க்கிறது என்பதை உறுதி செய்துள்ளன என்று கூறியுள்ளார்.
பியூ ஆய்வு மையம்  (Pew Research Centert) 23 நாடுகளில் நடத்திய ஆய்வின் படி அமெரிக்கா உலகின் முன்னணி சக்தி என்பதை விட சீனா உலகின் உச்ச பொருளாதாரச் சக்தி என்பதை வெளிப்படுத்தியுள்ளது.  ட்ரம்பின் அமெரிக்கா முதல் என்ற நுகர்வோரை ஈர்க்கும் ஆரவார மொழிகளுக்கு மத்தியில் சீனா எழுச்சியுற்று அமெரிக்கா வீழ்ச்சியடைந்துள்ளது. ட்ரம்ப் கோபமடைந்து அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணியாக இருந்த கனடாவின் மேல் உயர் வரியினை விதித்ததுமல்லாமல் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றப்போவதாக விடுத்த அறிவிப்பு கனடாவை சீனாவை மூலோபாய கூட்டாண்மையாக மாற்றவைத்துள்ளமை உலகில் புதிய அரசியல் எதார்த்தத்தை உலகம் பின்பற்றுவதைத் தொடக்கி வைத்துவிட்டது. ட்ரம்பின் அரசியல் மொழியில் இதனையே அவர் விருந்தோம்பல் எனப் பலநாடுகளையும் அழைத்து வெள்ளை மாளிகையில் உபசரிக்கையில் கூறினார். இப்பொழுது எல்லா நாடுகளும் இந்த உபசரிப்புத் தந்திரோபாயத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொள்கின்றன.
தென்கொரியா சீனாவுக்குச் சென்று பன்னிரெண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை தொழில்நுட்பத்திலும் வர்த்தகத்திலும் செய்தது. பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டு ஆண்டுகளின் பின்னர் சீனாவுக்குச் சென்று பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இறுக்கமடைந்து வந்த உறைபனி நிலையை உடைத்தெறிந்து ஒரு மாதத்துக்கு விசா இல்லாமலே சீன – பிரித்தானிய மக்கள் இருநாடுகளுக்கும் பயணிப்பதான உரிமையுடன் கூடவே அணுவாயுதங்களை யுத்தம் நடக்கும் களங்களில் சேமித்து வைத்திருக்கக் கூடாதென்ற உலகப் பாதுகாப்புக்கான உலக உடன்படிக்கையையும் நினைவுபடுத்தி அணுவாயுத அழிவில் இருந்து உலகைக் காப்பதற்கான உத்தியையும் முன்னெடுத்தார். யேர்மனின் சான்சிலர் பிரெரிக் மேர்சூம் பெப்ரவரி மாதக் கடைசியில் சீனாவுக்கு உத்தியோக பூர்வமாகச் செல்லவுள்ளார். கனடாப் பிரதமர் மார்க் கானியின் மொழியில் கூறுவதானால் ட்ரம்ப் உலகின் ஒழுங்கை உடைத்து விட்டார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் (Union) ஐரோப்பிய கூட்டமைவாக (Federation) மாற வேண்டு மென்னும் கோரிக்கை தோன்றியுள்ளது.  பிரிக்ஸிட்டால் விலகிய பிரித்தானியாவையும் உள்ளடக்கிய விருப்புள்ள வர்களின் ஐரோப்பியக் கூட்டணிக்கான வேண்டுகோள் உருவாகியுள்ளது.  உக்ரேன் – ரஸ்ய – அமெரிக்கா இடையில் தொடங்கி நடைபெற்று வரும் பேச்சுக்களில் ஐரோப்பிய பிரதிநிதிகளினதும் இணைப்புக்கான வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.  காலவதியான அமெரிக்க ரஸ்ய நியூகிளியர் வோர் கெட் உற்பத்தியை மட்டுப்படுத்தும் ஒப்பந்தம் காலவதியான நிலையில் புடின் தற்காலிகமாக ஒராண்டுக்கு அதனை நீடிக்கச் சம்மதித்து அமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்து அதனை தொடரலாம் என அறிவித்துள்ளமையும், சீனாவையும் இதில் இணைய அமெரிக்கா விடுத்த அழைப்பைச் சீனா இப்போதைக்கு இல்லையென எடுத்த எடுப்பிலேயே மறுத்திருப்பதும் இவ்வாரத்தில் உலகாளவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் வெனிசுலாவில் இருந்து மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள அமெரிக்க எண்ணெய் விற்பனைக்குப் பெரிய சந்தையாகவும் இந்திய ரஸ்ய ஆழமான உறவை அசைத்துப் பார்க்கும் உத்தியாகவும் இந்தியாவின் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 வீத வரிவிதிப்பை 18 வீதமாகக் ட்ரம்ப் குறைத்துள்ள அதே நேரம் இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கு வரியில்லை என்கிற உத்தரவாதத்தைத் ட்ரம்ப் பெற்றுள்ளார்.   இவ்வாறான சூழலில் ட்ரம்பைக் குறைகூறுவதில் காலத்தை வீணடிக்காது அமெரிக்க மக்களுக்கான நேரான பார்வை ஒன்றை முன்வைப்பதன் மூலம் அமெரிக்க மக்களின் வாழ்வை முன்னேற்றி ஏற்பட்டுள்ள சரிவை மீள் நிமிர்த்த வேண்டுமென அமெரிக்காவின வெர்மன்டின் சுயேட்சையான செனட்டராகவும் அமெரிக்க காங்கிரசின் வரலாற்றில் மிக நீண்டகால சுயேட்சை செனட்டராகவும் உள்ள பேர்னி சான்டேர்ஸ் 05.02. 26ம் திகதி அன்று பிரித்தானிய த கார்டியன் ஆங்கில நாளிதழில் ஒரு அருமையான சிந்தனைக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் “மக்கள் திரண்டெழுந்து சனநாயகத்தை சர்வாதிகாரத்துக்கு எதிராக நிலைப்படுத்த வேண்டும். நீதியைப் பேராசைக்கு எதிராகவும் ஒற்றுமையை பிரிவினைக்கு எதிராகவும் முன்னெடுக்க வேண்டும்.
இதனை மக்கள் அன்று உணர்ந்தனர். இன்றும் மக்கள் இதனை மீளவும் தமது உணர்வாக்க வேண்டும். மக்கள் ஒன்றுபட்டு எழுகின்ற போது எந்தப் பணத்தாலும்  எந்தத் தன்னல ஆட்சியாளராலும் அதனைத் தடுக்கவியலாது மக்கள் சாதிப்பார்கள்” என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளார். பேர்னி சான்டோர்ஸின் இந்த கருத்துக்களை ஈழத்தமிழர்களும் ஆழமாக நெஞ்சிருத்த வேண்டும் என்று இலக்கு வேண்டுகின்றது. அதே நேரத்தில் 1931 முதல் 1977 வரை ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் தனிப்பெருந்தலைவர் என்ற சிறப்புடன் தன்னை நிலைநிறுத்தி 09.02. 1977 இலே காலம் ஆகி இன்றும் ஈழத்தமிழர் நெஞ்சங்களில் வாழும் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய இறைமையைப் பாதுகாக்க அவருடைய 46 ஆண்டுகால அரசியல், சட்டம், மற்றும் வெளிவிவகார இராஜதந்திர அனுபவங்களின் அடிப்படையில் கூறிய மூன்று சொற்களாலான மந்திரம் “இனஒற்றுமை, இனத்தின் தன்மானம்,, இனத்தின் விடுதலை என்பனவற்றை ஈழத்தமிழர்கள் அவரின் 49வது ஆண்டு நினைவேந்தல் 09.02. 2026இல் வருகின்ற பொழுது நெஞ்சிருத்தி 22.05. 2026இல் அவரும் இணைந்து நின்று நிறைவேற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவு வருகின்ற பொழுது ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையை உலக மக்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான செயலணிகளை உரு வாக்கிக் கருத்தரங்குகள், மாநாடுகள், வழியாகவும் ஊடகத்துறை வழியாகவும் அரசியல் அறிவூட்டல் கல்வி அளித்தல் வழியாகவும் உச்ச முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென இவ்வாரத்தில் இலக்கு வேண்டுகிறது.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தில் இருபதாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஈ. எச் கார் அவர்கள் “ ஒரு சமுதாயம் எதிர்காலத்தை நோக்கித் தன்னால் பயணிக்க இயலும் என்கின்ற பலத்தில் நம்பிக் கையை இழக்கின்ற பொழுது விரைவாகத் தன்னுடைய பழைய காலத்தின் சாதனைகளின் வழி வாழ்வதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்” என்கிற எச்சரிப்பை அவருடைய வரலாறு என்றால் என்ன? என்கின்ற ஆய்வில் தெளிவாக எடுத்துரைத்தார். இதனால் ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையிலான தாயகம் தேசியம் தன்னாட்சி குறித்த நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே ஈழத்தமிழர் தேசிய நீக்கத்தை இறைமை நீக்கத்தை ஈழத்தமிழரின் தேசியம் இறைமை குறித்த சந்தேகக் கேள்விகளை எழுப்பி ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை பலவீனபப்டுத்தி அவர்களை அவர்களுடைய கடந்த காலத்தின் சாதனைகளிலிருந்து வெளியே கொண்டு வர முயலுபவர்களுக்கான சரியான எதிர்வினையாகுமென்பதே இலக்கின் இவ்வாரத்து உறுதியான பதில்.
ஆசிரியர்

Tamil NewsIlakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி, ஜனவரி-31-2026

உரையாடல், ராஜதந்திரம், வேறுபாடுகளுக்கு மேலாக எழுதல் இறைமையைப் பேணுவதற்கான இன்றைய உலகின் நடைமுறை