வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் கரி நாள் போராட்டம்

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.  எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.