சர்வதேச பிரச்சினையாக  உருவெடுத்துள்ள மீனவர்கள் மீதான தாக்குதல்!

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக  பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது சர்வதேச பிரச்சினையாக  உருவெடுத்துள்ளது.

இது சர்வதேச  ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே,  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  ”இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்” என்றார்.

‘அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர்  காவல்துறை தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்” என்கிறார் ரத்ன கமகே.

எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.