36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது. அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஏகப்பட்ட வீடியோக்களும் சிக்கின.
18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேராதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். அவரிடமிருந்த மின்னணு உபகரணங்களைப் பரிசோதித்தபோது, இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமைக்கான முதற்கட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலும் சிலருடன் இணைந்து இந்தத் துஷ்பிரயோகச் செயல்களைக் காணொளி (Video) எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளம் காணவும், மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தவும் சந்தேக நபரிடம் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக 72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் தற்போது கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”



