“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார்.
இந்நிலையில் இன்று முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று FCID
சென்றார். இதன்போது FCID வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்தவின் பேச்சாளர் மனோஜ் கமகே,
“ மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும். அதனால்தான் அவரது பாரியாரை இலக்கு வைத்து அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது போலும். அதுவும் நடக்காது.
ஷிரந்தி கல்விக்கு சேவையாற்றியவர். அது பற்றி பேசப்படுவதில்லை. சிரிலிய கணக்கு பற்றியே பேசப்படுகின்றது.” எனக் குறிப்பிட்டார்.



