இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் பூதாகரமாக வெளிப் பட்டிருக்கும் உட்கட்சிப் பூசல்கள் வெறுமனே இரு தனி நபர்களுக்கு இடையிலான மோதல் என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குள் ளாக்கும் நெருக்கடிகள் நிறைந்தவொரு விடயமாக உரு வெடுத்துள்ளது.
சிறிதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான முட்டிமோதல்கள் தமிழ்த் தேசியக் கொள்கை முரண்பாடு போன்று முலாமிடமுயன்றாலும் அது இரு தனிநபர்களுக்கு இடையிலான அதிகாரமோகத்தால் எழுந்துள்ள முரண் பாடுகளே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலகுமாறு சுமந்திரன் விடுத்த உத்தரவும், அதற்கு சிறிதரன் அளித்துள்ள பதிலும் அவ்விடத்தினைச் சூழ்ந்து அரங்கேறும் காய்நகர்த்தல்களும் கட்சியின் எதிர்காலத்தை முட்டுச்சந்துக்குள் நிறுத்தியுள்ளது.
இந்த நிலைமையின் பின்னணி தசாப்தங்களைக் கடந்தது. 2015ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்தல் களம் கண்ட சுமந்திரன் வெற்றி பெறுவதற்காக சிறிதரனின் அறிவகம் அலுவலகத்துக்குப் படியேறிச் சென்றபோது, அங்கே சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
அதிலொன்று தான், கட்சியின் தலைமையை சிறிதரன் வகிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பதாகும். அதன் பின்னணியில் தான், அரசியல் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்துக்கு நிகராக சுமந்திரனை சிறிதரன்பொதுவெளியில் விளித்திருந்தார்.
ஆனால் தேர்தல் நிறைவடைந்ததும் சிறிதரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை சுமந்திரன் நிறைவேற்று வதற்கு பதிலாக, கட்சியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் ‘சம்பந்தன்’ என்ற தனிமனிதனைக் கைக்குள் வைத்துக் கொண்டு அவரின் சிரேஷ்டத்துவத்தைப் பயன்படுத்தி கையாள ஆரம்பித்தார்.
அதிலிருந்து ஏற்பட்ட பனிப்போர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை உட்பட புதியநிர்வாகத்தெரிவு தேர்தல் மூலம் இடம்பெறுவதற்கு வழிசமைத்திருந்தது.
2024ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுகட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்படவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் தோல்வி அடைந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கட்சித் தலைமைக்கான தீவிர பிரச்சாரங்களை முடித்துவிட்டு ‘நானே தலைவர்’ என்ற மனோநிலையில் டிசம்பரில் குடும் பத்துடன் நத்தார் பண்டிகை விடுமுறையைக் கழிப்பதற்காக நியூசிலாந்து சென்றிருந்தவர் சுமந்திரன்.
ஆனால் கட்சித் தலைமைக்கான தேர்தலில் அவருடைய எதிர்பார்ப்பு முழுமையாக சிதைந்தது. அவர் நாட்டில் இல்லாத ஒருமாதத்தில் சிறிதரன் மேற்கொண்ட பிரச்சாரம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.
இந்த சூழலை முகங்கொடுப்பதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அவரது குழுவினரும் கூடத்தான். விளைவு புதியதலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறிதர னுக்கு பதவியை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள் வதற்கான மாநாட்டைநடத்தியிருக்க வாய்ப்பு வழங்கப் படவில்லை. கூடவே நீதிமன்றத்தில் புதிய தெரிவுக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன.
இதனால் சிறிதரன், சுமந்திரன் இடையேயான இடைவெளி அதிகரித்தது. பொதுவெளியில் பரஸ்பரம் இருவரும் விமர்சித்துக்கொள்ளும் நிலைமைகளும் உருவா கின. சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டும் இரண்டு ஆண்டுகளாக அப்பதவியை வகிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது.
சிறிதரனின் கோட்டையாக கருதப்படும் கிளி நொச்சிக்குள் சுமந்திரன் தனக்கென ஒரு அணியை உருவாக்கியதோடு அதனைப்பயன்படுத்தி சிறிதரனுக்கு எதிரான விமர்சனங்களை தீவிரப்படுத்தினார். யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அவ்விதமான சூழல் உருவாக்கப்பட்டது.
கட்சியின் மத்திய குழுவிலும், அரசியல் குழுவிலும் சிறிதரனுக்கு காணப்பட்ட ஆதரவை மெல்லமெல்ல மாற்றியமைக்க ஆரம்பித்தார். கூடவே வைத்தியர் சத்திய லிங்கத்தை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினா மாச் செய்யவைத்து, அப்பதவியில் சுமந்திரன் அமர்ந்தார்.
‘பதில்’ பொதுச்செயலாளராக இருந்தாலும் கூட, கட்சியின் அனைத்து விடயங்களுக்குமான ‘கையொப்ப’ அதிகாரம் அவரிடத்தில் சென்றதால் இயல்பாகவே சுமந்திரனிடத்தில் கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் சென்றடைந்தது.
இந்நிலையில் 2024இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிறிதரன் போட்டியிடுவதற்காக ஆசன ஒதுக் கீட்டைச் செய்வதில் இழுபறியை ஏற்படுத்தினார். இருப்பி னும் களச்சூழல் சிறிதரனுக்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிரகாரம், சிறிதரன் தேர்தலில் வெற்றி பெற்றார். சுமந்திரன் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒட்டுமொத்த வேட்பாளர் அணியையும் தனக்கு சாதகமாக களமிறக்கிய போதும் அவரால் வெற்றிபெற முடிந்திருக்கவில்லை.
இப்பின்னணியில் சிறிதரனைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகின. அதற்காக சுமந்திரனின் ஆதரவு அணி களமிறக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் முதல் மரபு ரீதியான ஊடகங்கள் வரையில் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது.
சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பனிப்போர் பகிரங்கமானது. தென்னிலங்கையிலும், இராசதந்திர மட்டங்களிலும் இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்கும் நிலைமைகளும் தோற்றம் பெற்றிருந்தன.
இப்படியொரு சூழலில் தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக, சிறிதரன் அரசியலமைப்புப் பேரவையில் அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு ஆதர வாக எட்டுச் சந்தர்ப்பங்களில் வாக்களித்தமை மற்றும் இராணுவப் பின்னணிகொண்டவர்களின் நியமனங்களை ஆதரித்தமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் இராணுவமயமாக்கலுக்குத் துணைபோவதாக கட்சி யின் மத்திய குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து சிறிதரன் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றுஅழுத்தமளிப்பதென்று தீர்மானமும் சிறிதரன் இல்லாத மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தார்மீகரீதியாக வலுவானவையாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் இருக்கும் தனிநபர் அரசியல் உள் நோக்கங்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகள் இந்த விவகாரத்தைச் சிக்கலாக்குகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில், குறிப்பாக மைத்திரி ரணில் கூட்டாட்சி அரசாங்கத்தின் போது, பலசர்ச்சைக்குரிய தீர்மானங்களுக்கு ஆதரவளித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் களைத் தள்ளிப்போடும் சட்டத்திருத்தம், ஒற்றையாட்சி அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை தயாரித்தமை உட்பட பல விடயங்களில் பிரதான எதிர்க்கட்சி என்ற வகி பாகத்தில் இருந்து கொண்டு நெகிழ்வுத்தன்மையை காண்பித்தது. இது அதன் வாக்கு வங்கியைக் கணிசமாகப் பாதித்திருக்கிறது என்பது பிறிதொரு விடயம்.
எவ்வாறாயினும், தமிழரசுக்கட்சியின் அத்தகைய முடிவுகளின் மூளையாகச் செயற்பட்ட எம்.ஏ.சுமந்திரன் என்பது வெளிப்படையானது. அத்தகைய சுமந்திரன் தற் போது அதே காரணங்களை முன்வைத்து சிறிதரனை ஓரம் கட்ட முனைவது அரசியல் முரண்பாடாகும். சிறிதரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் இருந்து இன்னும் முறையான விளக்கங்கள் வெளிவராத நிலையில், கட்சியின் அரசியல் குழு இந்த விவகாரத்தை மிக அவசரமாகக் கையாள்வது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
குறிப்பாக, சிறிதரனை அரசியல் ரீதியாக பல மிழக்கச் செய்து இறுதியாக கட்சியிலிருந்து வெளியேற்ற அவருடைய பாராளுமன்றப் பதவியை பிடுங்கி எடுப்பதன் மூலம், தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரன் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக எழும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை.
மறுபுறம், சிறீதரன் விடுதலைப்போராட்டம், தமிழ்த் தேசிய உணர்வு ஆகிய இரு கவசங்களுடன் பயணித்துவரும் ஒருவர். உணர்வெழுச்சியை வாக்குகளாக மாற்றக்கூடிய புலமையில் தான் அவரது அரசியல் பயணம் இன்னமும் சாத்தியமாகி க்கொண்டிருக்கின்றது.
அதற்காக, சிறிதன் ‘தமிழ்த் தேசிய தூய அரசியல் வாதி’ என்று கொள்வதற்கு இல்லை. 2010ஆம் ஆண்டு கிளிநொச்சி கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முக்கிய கூட்டத்திலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவருடைய தொடர்புகளும், சந்திப்புக்களும் திரைமறைவில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளும் இயற்கை நீதிக்கு எதிரானவை தான்.
அதுமட்டுமன்றி, தற்போதைய குற்றச்சாட்டுக்களின் படி எட்டு சந்தர்ப்பங்களில் அரசுக்கு, இராணுவத்துக்கு ஆதரவாக செயற்படும் வரையில் நடவடிக்கைகள் எடுக்கப் படாது காத்திருந்தமைக்கான காரணம் என்ன?
சிறிதரன் இராணுவத்துக்கு ஆதரவாக செயற் பட்டார் என்று கூறும் சுமந்திரன் இராணுவம் புடைசூழ ஐந்தாண்டுகளாக பயணித்ததையும், பொன்சேகாவை ஆதரிப்பதற்கு எடுத்த தீர்மானத்தில் எவ்வளவு தூரம் செல் வாக்குச் செலுத்தினார் என்பதையும் மறந்து விடலாகாது.
அந்த வகையில் ஒப்பீட்டளவில் சுமந்திரன், சிறி தரன் ஆகிய இருவரும் சரி அவரது அணியினரும் சரி தூய தமிழ்தேசியவாதிகள்’ என்று கொள்ள முடியாது. இராணுவத்துடனும் சரி, தென்னிலங்கையுடனும் சரி திரைமறைவில் இவர்கள் கொண்டிருக்கின்ற உறவு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சாதாரண தமிழ் மக்கள் அறிந்திருக்காது விட்டாலும் குறித்த இருவரின் மனச் சாட்சிக்கே வெளிச்சம்.
ஆனால் சிறிதரனைப் பொறுத்தவரையில், யாழ்ப் பாணத் தேர்தல் மாவட்டத்தில் கட்சி பெற்ற வாக்குகளில் சரிபாதிக்கும்மேலான விருப்பு வாக்குகளைத் தனி ஒருவராகப் பெற்று வருகிறார். ஆதலால் அவர் மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவராக, காணப்படுகையில் தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவரை தனிமைப்படுத்துவது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி.கே. சிவஞானம் கட்சியின் பதில் தலைவராகப் இருந்தாலும் கூட தமிழரசுக்கட்சி முழுமையாகச் சுமந்திர னின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் உட்கட்சி ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயக ரீதியில்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டும், பதவியேற்க முடியாமல் தடுக்கப்பட்ட சிறிதரன், இப்போது பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திருமலையில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தை அடுத்து கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் மற்றும் பதில்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் முரண்பாடான கருத்துக்கள் நேரெதிராக இருக்கின்றன. சிறிதரன் மீதான நடவடிக்கைகளை ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தியதில் கட்சிக்குள் ளேயே இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதை அம்பலப் படுத்தியுள்ள நிலையில் தற்போது அதனை வெறுமனே ‘உள்வீட்டு விவகாரம்’ என்று கூறி மறைக்க முற்படுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது.
சிறிதரன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற முனை யும் முயற்சிகள் வெற்றிபெற்றால், அது வடக்கில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியைப் பிளவுபடுத்தி, மாற்றுச் சக்திகளுக்கு வழிவகுத்துவிடும். குறிப்பாக களத்தில் வேகமாகச் செயற்பட்டு வரும் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தன்னை ஆழமாகவேரூன்றிக் கொள்வதற்கு வழிசமைக்கும் கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சுமந்திர னின் வழிகாட்டல்களை ஏற்றுச் செயற்பட்டாலும், கிராம மட்டத்திலானஆதரவாளர்கள் சிறிதரனின் பக்கமே நிற் கிறார்கள் என்பது கடந்த காலத் தேர்தல் முடிவுகளில் தெளி வாகியுள்ளது.
இந்தமுரண்பாடு முற்றி சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற நேரிட்டால், அது தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்தத்தமிழன அடையாளச் சிதை வுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.
சிறிதரன் மீதான ஊழல் மற்றும் சொத்து சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், அவரை இராணுவமயமாக்கலின் ஆதரவாளராகச் சித்தரிப்பதும் அவரை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தினாலும், அதுநீண்ட காலநோக்கில் கட்சியின் ஸ்திரத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கும்.
சுமந்திரனின் சட்டப்புலமையும் சாதுரியமான காய்நகர்த்தல்களும் தற்காலிக வெற்றியைத் தந்தாலும், மக்கள் ஆணைஇல்லாமல் கட்சியை வழிநடத்துவது என்பது நீண்ட காலம் நிலைக்காது. அதுமட்டுமன்றி, சுமந்திரனைச் சூழ்ந்துள்ளவர்களும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்களே தவிரவும் உண்மையான விசுவாசிகள் அல்லர்.
ஆகவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனது உட்கட்சி முரண்பாடுகளைத் தீர்க்க விவேகமான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையைக் கையாள வேண் டும். சிறிதரன் மீதான விமர்சனங்களை விவாதிப்பதும், சுமந்திரனின் தலைமைத்துவ நகர்வுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் அவசியமானது. என்றாலும், அவை தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தாத வண்ணம் அமைய வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் இந்தநெருக்கடியைக் கையாளத் தவறினால், தமிழ் அரசுக் கட்சி தனது வரலாற்றுப் பெருமையை இழப்பதோடு, தமிழ் மக்களின்அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்திவிடும்.
சிறிதரன், சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் மோதல்களின் இறுதிப் பாதிப்பு என்பது குறித்த இரு தனிநபர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தான் என்பதைத் தமிழரசுக் கட்சிஉணர வேண்டிய தருணம் இதுவாகும். அதனை உணரத் தவறினால் அது தமிழன இருப்புக்கே சாபக்கேடாகிவிடும்.



