பிராஜா சக்தி திட்டம்: தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்து!

தேசிய மக்கள் சக்தி என்கின்ற JVPயால் கொண்டுவரப்பட்ட பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஜா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை மேற்கொள்வதாக கூறிவருகிறார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு. இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும் என்றும் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கையாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.

வடக்குக்கு ஜனாதிபதி வருகின்ற போது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் JVPயிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது நேரடியாக வடக்கு கிழக்கில் தமிழர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் ஒரு செயற்திட்டமாகும் என்றும் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.