தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் பின்பற்றவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், வாகனங்கள், மரம் , மருந்துகள் மற்றும் ஏனைய அனைத்து ‘பரஸ்பர வர்த்தகப் பொருட்களுக்கும்’ விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரியானது, இனி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையின்படி அமெரிக்கா தனது வரிகளை விரைவாகக் குறைத்துள்ள போதிலும், தென்கொரிய பாராளுமன்றம் அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் மந்தகதியில் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள தென்கொரியா, இது குறித்து வொஷிங்டனுடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளது.
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்கொரிய தொழில் துறை அமைச்சர் கிம் ஜுங்-க்வான், விரைவில் வொஷிங்டன் சென்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹவார்ட் லட்னிக்-ஐ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



