அமெரிக்கா ஈரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று ஈரனை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “ஈரானை நோக்கி பெரிய படையொன்று நகர்ந்துவருகிறது. ஆனால், எதுவும் தற்போது நடைபெறும் என தோன்றவில்லை. ஆனாலும், நாங்கள் ஈரானை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.” என்றார்.
ஈரானில் 837 பேரின் மரண தண்டனையை தாங்கள் நிறுத்தியதாக கூறியுள்ள ட்ரம்ப், அவர்களுள் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்றார்.
அவர் கூறுகையில், “நீங்கள் அவர்களை தூக்கிலிட்டால், உங்களுக்கு எதிராக இதுவரையிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையை ஒப்பிடும்போது அணுசக்தி திட்டம் தொடர்பாக நாங்கள் எடுத்த நடவடிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.” என்றார்.
“அதை இரத்து செய்துவிட்டதாக அவர்கள் (ஈரான்) தெரிவித்துள்ளனர், ஒத்திவைத்துள்ளதாக அல்ல. அதுவொரு நல்ல அறிகுறி.”
மேலும், “ஈரானை நோக்கி மிகப்பெரிய படை நகர்ந்து வருகிறது. அதை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்றார்.
ஈரானில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலரும் ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வார, இந்த போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க ஈரான் திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகின. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மரண தண்டனையை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.



