மலையகத் தியாகிகள் வாரம்: வரலாற்றின் வேர்களும் உரிமைகளுக்கான எதிர்காலப் பயணமும் -மருதன் ராம்

ஒரு சமூகத்தின் இருப்பு என்பது அதன் வரலாற்றின் ஆழத்திலும், அந்த வரலாற்றைக் கட்டியெழுப்பச் சிந்தப்பட்ட இரத்தத்திலும் தங்கியுள்ளது. “வேர் இல்லாத மரமும், வரலாற்றை மறந்த சமூகமும் நீடித்து நிலைக்க முடியாது” என்ற கூற்றுக்கு இணங்க, இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம் தனது இருநூறு ஆண்டுகால வரலாற்றில் சந்தித்த இழப்புகளும், தியாகங்களும் ஈடு இணையற்றவை. இலங்கையின் பொருளாதாரத் தூணாகத் திகழும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதற்காகக் காடு மேடுகளைத் திருத்தி, குளவிக் கடியிலும், கொடிய நோய்களிலும் மடிந்து போன ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஆன்மாக்கள் இன்றும் அந்த மலைச் சரிவுகளில் அலைந்து கொண்டிருக்கின்றன.
அவர்களின் தொடர்ச்சியான உரிமைப் போரா ட்டத்தின் முதல் வித்தாகத் திகழ்ந்த முல்லோயா கோவிந்தன் தொடங்கி, இன்றுவரை நிலத்திற்காகவும், ஊதியத்திற்காகவும் போராடும் ஒவ்வொரு தொழிலாளியும் இந்த வரலாற்றின் நாயகர்களே. மலையகத் தியாகிகள் வரலாற்றில் 1940 ஜனவரி 10 என்பது ஒரு மறக்க முடியாத திருப்புமுனை. 1930-களின் இறுதியில் பிரித்தானியக் கம்ப னிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேயிலைத் தோட்டங்க ளில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். மிகக்குறைந்த ஊதியம், முறையற்ற வேலை நேரம் மற்றும் அடிப்படை வசதிகளற்ற லயன் குடியிருப்புகள் எனத் தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர்.
1939 ஆம் ஆண்டின் இறுதியில் ஹேவாஹெட்ட ‘முல்லோயா’ தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது உரிமை களுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் கிளர்ந்தெழுந்தனர். இது இலங்கைப் பெருந்தோட்ட வரலாற்றில் ஒரு தீர்க் கமான தொழிற்சங்கப் போராட்டமாக மாறியது. 1940 ஜனவரி 10ஆம் திகதி, போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பொலி ஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முல்லோயா கோவிந்தன் அநியாயமாகக் கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூடு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றை மாற்றியமைத்தது. தொழிலாளர்களின் இரத்தம் முதல்முறையாக உரிமைக்காகப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விவாதிக்கப்பட்டது. கோவிந்த னின் தியாகம் மலையக மக்களிடையே ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன் நினைவாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 ஆம் திகதி “மலையகத் தியாகிகள் தினம்” ஆகவும், ஜனவரி 4 முதல் 10 வரை தியாகிகள் வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது
மலையகத் தியாகிகளின் பரிமாணங்கள்
மலையக உரிமைப் போராட்டம் என்பது ஒரு சில சம்பவங்களுடன் சுருங்கிவிடக் கூடியதல்ல. அது தொழில் உரிமை, குடியுரிமை, மொழி உரிமை எனப் பல தளங்களைக் கொண்டது. முல்லோயா கோவிந்தனுக்குப் பிறகு 1970-களில் இடம்பெற்ற அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு எதிரான போராட்டங்கள் முக்கியமானது. குறிப்பாக, 1986 இல் வேதன உயர்வு கோரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சம்பளப் போராட்டம் என்பது நவீன காலத்தின் ஒரு மாபெரும் அறவழிப் போராட்டமாகும். இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் சந்தித்த அடக்குமுறைகளும், இழப்புகளும் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை. அதேநேரம், 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரி மைச் சட்டம் மலையக மக்களின் முதுகெலும்பை உடைத்தது.
பல இலட்சக்கணக்கான மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். இந்த அநீதிக்கு எதிராக காந்தி வழியில் அறப்போராட்டங்களை முன்னெடுத்த மலையகத் தலை வர்களும், அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுத் தியாகங்கள் செய்த சாதாரண மக்களும் போற்றுதலுக் குரியவர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் போராட்டத் திற்குப் பின்னரே பலருக்குக் குடியுரிமை கிடைத்தது என்பது வரலாற்றின் கசப்பான உண்மை. இதேவேளை, இனக்கலவரங்களின் போது மலையக மக்கள் நேரடியான இலக்குகளாக மாறினர். தோட்டப் பகுதிகளில் வீடுகள் எரிக்கப்பட்டன, மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். மலையக மக்களின் தியாகம் என்பது வெறும் தொழிற் சங்கப் போராட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இன வாதத்திற்கு எதிரான தற்காப்புப் போராட்டமாகவும் அது இருந்தது. வட-கிழக்கு நோக்கிய மலையக மக்களின் இடப்பெயர்வு என்பது அவர்களின் ஒரு புதிய தியாக அத்தியாயத்தின் தொடக்கமாகும்.
உள்ளூர் எல்லையைத் தாண்டிய நினை வேந்தல்
முன்பு மலையகத் தியாகிகள் தினம் என்பது அந்தந்தத் தோட்டங்களுக்குள்ளும் அல்லது ஒரு சில தொழிற்சங்க அலுவலகங்களுக்குள்ளும் மட்டுமே முடங்கிக் கிடந்தது. ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. இன்று வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் மலையகத் தியாகிகளுக்காக சுடர் ஏற்றப் படுகின்றன.
இது இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களி டையேயான ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. மறுபுறம் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் மலையக வம்சாவளியினரான புலம்பெயர் தமிழர்க ளும் இன்று சர்வதேசத் தளத்தில் இந்தத் தியாகங் களை எடுத்துச் செல்கின்றனர். சமூக ஊடகங்கள் வழியாக கோவிந்தன் போன்ற தியாகங்களை வரலாறு உலகெங்கும் பரப்பப்படுகிறது. தொழிற்சங்க அரசியலுக்கு அப்பாற்பட்டு, மலையக இளைஞர்கள் இன்று தங்களின் வரலாற்றைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
“வேர்களைத் தேடுதல்” என்ற நோக்கில் அவர்கள் முன்னெடுக்கும் கலை, இலக்கிய முயற்சிகள் தியாகிகளின் வரலாற்றைச் சாகாவரம் பெற்றதாக மாற்றுகின்றன. இவ் வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதி லும் அடுத்த தலைமுறைக்கு மலையக தியாகிகள் புரிந்த தியாக செயல்கள் கடத்தப்படுவதில் குறைபாடு நிலவுகிறது. எனவே, மலையகத் தியாகிகளை வெறும் சிலைகளில் மட்டும் வைத்துப் பார்க்காமல், அவர்களின் கனவுகளை நனவாக்குவதே உண்மையான அஞ்சலியாகும். குறிப்பாக தியாகிகளின் பெயர்கள், அவர்கள் உயிர்நீத்த இடங்கள் மற்றும் போராட்டச் சூழல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இதற்கான ஒரு தேசிய நூலகம் அல்லது ஆவணக் காப்பகம் மலையகப் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தோட்டத்திலும் அந்தத் தோட்டத்தில் தியாகம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டும். தியாகிகள் எதற்காகப் போராடினார்களோ, அந்த அடிப்படைப் பிரச்சனை இன்றும் தீரவில்லை. “லயன் வாழ்க்கை” மாற வேண்டும். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாம், ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் சொந்தமாக ஒரு சிறு துண்டு நிலமும், கௌரவமான வீடும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மலையக இளைஞர்கள் பெருந் தோட்டத் துறையை விட்டு வெளியேறி, உலகளாவிய ரீதியில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறி வருகின்றனர். இந்தநிலை மேலும் வலுப்பெற வேண்டும். அறிவுசார் சமூகம் மட்டுமே தனது வரலாற்றை வீரியமாகப் பேச முடியும்.
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த வாய்ப் புகளைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். “மலையகத் தமிழர்” என்ற தனித்துவமான தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். தியாகிகள் வாரம் என்பது வெறும் நினைவேந்தல் வாரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அரசியல் பலத்தைக் காட்டும் வாரமாகவும் மாற வேண்டும். அனைத்து மலையக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தியாகிகள் விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மலையகத் தியாகிகள் சிந்திய இரத்தம் வீண்போகக் கூடாது. அவர்கள் ஏற்றி வைத்த போராட்டத் தீப்பந்தம், இன்றும் லயன் குடியிருப்புகளில் வறுமையிலும் அறியாமையிலும் வாடும் மக்களின் வாழ்வை ஒளிரச் செய்ய வேண்டும். 1940இல் கோவிந்தன் ஆரம்பித்த அந்தப் பயணம், ஒரு கௌரவமான சமூகமாக மலையக மக்கள் தலைநிமிரும் வரை தொடர வேண்டும்.
வரலாற்றை மறந்தால் வழிதவறிப் போவோம். ஆகவே, இந்தத் தியாகிகள் வாரத்தில் நம் முன்னோர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவர்களின் கனவான “உரிமையுள்ள வாழ்வை” வென்றெடுக்க உறுதி பூண வேண்டும்.