மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தித் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்து ஆராய்வதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறைமை குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 12 பேர் கொண்ட விசேட செயற்குழுவை நியமிக்கும் யோசனையை ஆளும் தரப்பு பிரதம அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்தச் செயற்குழுவுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் மிக விரைவில் நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை விரைவுபடுத்துவதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அழுத்தங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.