மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிக்குளம் மக்களின் அவல நிலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். 2007ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் மக்கள், இதுவரை மீளக்குடியேற்றப்படாமல் காயக்குழி மற்றும் மலைக்காடு கிராமங்களில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக வீடுகளில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் தங்கியுள்ளனர். மக்களின் குடியிருப்பு நிலங்கள், விவசாயக் காணிகள், குளங்கள் மற்றும் மீன்பிடி இறங்குதுறைகள் என அனைத்தும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் முள்ளிக்குளம் மக்களை உடனடியாக அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கடற்படை உயர் அதிகாரி, முள்ளிக்குளத்தில் உள்ள ஒரு தொகுதி நிலம் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டதுடன் அந்தக் காணிகளை விடுவிக்கக்கூடிய சாதகமான நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 15ஆம் திகதி தாம், மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன்போது முள்ளிக்குளம் காணி விடுவிப்பு மற்றும் மக்கள் மீள்குடியேற்றம் குறித்து விரிவாகக் கலந்துரையாடி இறுதி முடிவு அறிவிக்கப்படும்”எனவும் உறுதியளித்தார்.



