தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிக்க விகாராதிபதி திட்டவட்ட மறுத்துள்ளதாக தகவல்

யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என அந்த விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கிலிருந்து வெளிவரும் நாளிதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்ட விசேட குழுவின் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை பகுதியளவேனும் விடுவிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், இதற்குப் பதிலளித்த விகாராதிபதியும் அமைச்சின் அதிகாரிகளும், விகாரை அமைந்துள்ள பகுதி முழுவதுமே விகாரைக்குச் சொந்தமான நிலம் என்றும், அதனை விடுவிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், விகாரையின் முக்கிய கட்டடங்களைத் தவிர ஏனைய பகுதிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காகக் காணி அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு முரணாக, காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி தரப்பு எடுத்துள்ள இந்தத் தீர்மானம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல் தரப்புகள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.