அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடையும் – ஜனாதிபதி

WhatsApp Image 2025 12 31 at 10.18.52 2 அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடையும் - ஜனாதிபதி

93 ஆண்டுகால உள்நாட்டு  இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும்,  இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட  33 பில்லியன் ரூபா மேலதிக வருவாய் சேகரிப்பு எனவும், கடந்த ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது இது 15% அதிகரிப்பாகும் என்றும் உள்நாட்டு  இறைவரித் திணைக்கள பணிப்பளர் நாயகம் ருக்தேவி பெர்ணான்டோ  தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை (30)  திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்பார்த்ததை விட அதிக வருவாயை பெற்றுத் தந்தமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதே இலக்கை நோக்கி தொடர்ந்து பணியாற்றி, நாட்டிற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை அடைவதற்கு அர்ப்பணிக்குமாறு  அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.

யாருக்கும் வரி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகை வழங்கப்படவில்லை என்றும், தனிப்பட்ட, குடும்ப மற்றும் அரசியல் நெருக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வரி கலாச்சாரம்  முடிந்துவிட்டது என்றும் கூறிய ஜனாதிபதி, வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக  தராதரம் பாராது  சட்டத்தை அமுல்படுத்தத் தயங்க மாட்டேன் என்றும்  குறிப்பிட்டார்.

வரி வசூலிப்பதென்பது அடக்குமுறை அல்லது வற்புறுத்தல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது அரசின் உரித்து என்றும், அந்த பங்களிப்பைப் பெறுவதற்கு சட்டதிட்டங்கள் மற்றும் பதவிகளிலும், ஊழியர்களிலும் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அனைத்துப் பொருளாதார சாதனைகளின் பலன்களும் நாட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான சேவைகளை திறம்படச் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், போக்குவரத்து கட்டமைப்பின் புதிய மாற்றத்திற்கும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளர்ச்சிக்கும் அரசாங்கம் போதுமான நிதியை வழங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரி தொடர்பான கல்வியறிவை அதிகரித்தல்,  எளிமையான வரி முறைமையை முன்னெடுத்தல் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை நிரப்புதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை முறையாகச் சேகரிப்பதற்காக, திட்டமிட்ட இலக்குகளின் ஊடாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.