வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போகோ ஹராம் மற்றும் ‘இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்’ போன்ற குழுக்கள் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன – இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வன்முறைகளை ஆய்வு செய்யும் குழுவான அக்லெட் (Acled) தெரிவிக்கிறது.
மத்திய நைஜீரியாவில், நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் – ஆனால் இரு தரப்பினரும் குற்றங்களைச் செய்துள்ளனர். ‘கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ நடத்தியதை அறிவித்த ட்ரம்ப் இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை ‘பயங்கரவாதக் கழிவுகள்’ என்று விவரித்தார், ‘முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொல்வதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ராணுவம் “பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியதாக” டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், “நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. மெர்ரி கிறிஸ்மஸ்!” என்று கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து நைஜீரிய அரசு இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.



