பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை’ என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.
அதேபோன்று, ‘பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?’ எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
‘மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன’ என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.



