நத்தார் தினத்தன்று உக்ரைன் – ரஷ்யா போரினை இரு நாடுகளும் நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்குமாறு புனித திருத்தந்தை 14வது லியோ விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டால் அவர் கவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 2022ஆம் ஆண்டு முதல் போர் நிலவி வருகிறது. இப்போர்த் தாக்குதல்களில் இரு தரப்பிலும் பெண்கள், சிறுவர்கள், படையினர் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இப்போரினை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அந்த அமைதிப் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
இதனிடையே நாளை வியாழக்கிழமை (25) உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நத்தார் தினத்தன்று நிறுத்தி, அமைதியை கடைபிடிக்குமாறு பாப்பரசர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், திருத்தந்தையின் வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து, அமைதிக்கான தனது கோரிக்கையை ரஷ்யா நிராகரித்தமை தனக்கு கவலையளிப்பதாக திருத்தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



