தாயகத் தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழகம் என்பது வெறுமனே அண்மித்தவொரு மாநிலம் மட்டுமல்ல, அது வொரு உணர்வுப்பூர்வமான பின்களமாகவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரலை எதி ரொலிக்கும் வலுவான தளமாகவும் இருந்து வந்துள்ளது.
தந்தை செல்வா முதல் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரை தயாக தமிழ்த் தேசிய அரசி யல் தலைமைகள் டில்லியை நோக்கிய தமது அரசியல் நகர்வுகளை தமிழகத்தின் ஊடாகவே அதிகளவில் முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும், கடந்த சில தசாப்தங்களாக தாயக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தமிழகத்தின் பிரதான அரசியல் சக்திகளுக்கும் இடையே பாரியதொரு ‘தொடர்பாடல் இடை வெளி’ நிலவி வருகின்றது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கான முக்கிய முயற்சியாக, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினரின் தற்போதைய தமிழக விஜயம் அமைந்துள்ளது.
கஜேந்திரகுமார் தலைமையிலான அணியி னது தமிழக விஜயம் வட,கிழக்கு அரசியல் பரப்பில் வாதவிவாதங்களை தோற்றுவித்துள்ள அதேநேரம், டில்லி, கொழும்பு மத்திய அரசுகளின் மிகமிக கூர்மையான அவதானத்தையும் ஒருங்கே கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமா கின்றது.
வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், அப் பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற ஆளுமை மிக்க தலைவர்களுக்குப் பிறகு, தாயக தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தில் இருந்த தலைவர்களுடன் கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுவதில் போதிய ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
குறிப்பாக, கருணாநிதி – ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கு இடை யிலான அரசியல் போட்டிகளுக்குள் சிக்கிக் கொள் ளக்கூடாது என்ற எண்ணத்தில், பல தமிழ் தேசியத் தலைவர்கள் தமிழக அரசியலைத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தனர். அதுமட்டுமன்றி, மறைந்த சம்பந்தன் போன்ற தலைவர்களை நேரடியாக டில்லி கையாள ஆரம்பித்திருந்தமையும் அதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
இந்தப் போக்கினால் தமிழகத்திற்கும், தாயகத்துக்கும் இடையிலான அரசியல் உறவுகள் என்பதற்கு அப்பால் அனைத்து மட்டங்களிலான இருதரப்பு உறவில் வெகுவானதொரு தேக்க நிலை நீடித்தது. ஆனால், இக்காலகட்டத்தில் மலையகத் தலைவர்களான செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் மற்றும் முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் போன்றோர் தமி ழகத்தின் முக்கிய தலைவர்களுடன் மிக நெருக் கமான உறவுகளை தொடர்ச்சியாகப் பேணி வருகின்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அண்மையில் ரவூப் ஹக்கீம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தும், செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மலை யகத் தலைவர்கள் தமிழகத்துடன் கல்வி, கலா சாரம் மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளைத் தடையின்றித் தொடர்ந்து வருவதும் இதற்குச் சான்றாகும். இந்தத் தலைவர்கள் தமிழகத்தின் பலமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்ட மைப்புக்களை ஆகக்குறைந்தது தனிப்பட்ட வகை யிலாவது தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ் தேசியக் கட்சிகள் குறைந்த பட்ட தொடர்பாடல் உறவுகளில் இருந்து அந்நியப்பட்டிருந்தமை தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனமாகும்.
இந்நிலையில் தமிழகத்துக்குச் விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான அணி யினர், இலங்கையின் ஆட்சியில் உள்ள அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் விரை வில் ‘ஏக்கிய இராச்சிய’ (ஒற்றையாட்சி) அரசி யலமைப்பு வரைவை முன்வைத்து, அதையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்ட முயலப்போகின்றது என்பதை அம்பலப் படுத்தியுள்ளனர். கூடவே, ஏற்கனவே தமிழர்களால் நிராக ரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை விடவும் பல வீனமான ஒரு தீர்வை அரசு திணிக்க முயல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘சமஷ்டி’ முறையிலான தீர்வுக்கு இந்தியாவின் ஆதரவைத் திரட்டுவதற்கான அழுத்தத்தை தமிழகம் வழங்க வேண்டும் என்பதையும் வலி யுறுத்தியுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஒருங்கிணைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த கஜேந்திர குமார் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களையும் நேரில் பார்த்து,; ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் தாயகப்பிரச்சினை நோக்கி மீண்டும் ஈர்ப்பதற்கு பிரயத்தனம் செய்துள்ளனர்.
அத்தோடு, தமிழகத்தில் எரிபற்றுநிலையில் உள்ள கடற்றொழிலாளர்கள் விவகாரத்துக்கும் நியாயமான தீர்வு வேண்டுமென தமிழகத் தலை வர்களை நேரடியாகவும் எழுத்துமூலமாகவும் கோரியுள்ளமையும், தமிழர்களை மோதவிட்ட இலங்கை, இந்திய மத்திய அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருப்பதும் அவசரமான அவசியமான விடயமாகிறது.
கஜேந்திரகுமார் குழுவினரின் இந்த நகர்வுக்கு ஏனைய இலங்கைத் தமிழரசுக்க ட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உள்ளிட்டவை சேறடிப்புச் செயற்பாடு களை கனகச்சிதமாக முன்னெடுத்துக் கொண்டிருக் கையில் சந்திப்புக்களினால் அடுத்து தீவிரமான விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் ‘ஏட்டிக்குப் போட்டியாக’ நகர்வுகளைச் செய்துள்ளது.
கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவி னர் தமிழகத்தில் அரசியல் உரிமைகள் மற்றும் சமஷ்டி பற்றி உரையாடல்களை ஆரம்பித்து மீளவும் உறவுகளைப் புதுப்பித்து தமிழ்த் தேசிய ஆதரவு தளத்தை வலுப்படுத்துவதற்கு முயற் சித்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கை அரசாங்கம் தனது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தர லிங்கம் பிரதீப்பை அவசரமாகத் தமிழகத்திற்கு அனுப்பி முதலமைச்சரைச் சந்திக்க வைத்துள்ளது.
இந்தச் சந்திப்பில் ஐயப்பன் யாத்திரைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தேசிய அங்கீகாரம் பற்றி எடுத்துரைக்கப்பட்டிருப்பது தான் வேடிக்கை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மதங்களை முன்னிலைப்படுத்துகின்ற கட்சி யொன்றல்ல. அவ்வாறிருக்கையில் இலங்கை அரசாங்கம் மத விடயத்தினை மையப்படுத்தி முதல்வரை அணுக்கிருப்பது தான் அந்த வேடிக் கைக்கு காரணமாகிறது.
உண்மையிலேயே கஜேந்திரகுமார் அணி யின் அரசியல் வீச்சை மழுங்கடிப்பதற்கும், இலங்கை அரசு தமிழகத்துடன் இணக்கமான, இறுக்கமான உறவிலேயே இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப் பட்டவொரு அநுர அரசாங்கத்தின் தந்திரோபாய நகர்வாகும். குறிப்பாக, தமிழ் தேசியத் தலை மைகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான அடிப்படையாகவுள்ள நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு பற்றிப் பேசும்போது, அநுரவின் அரசாங்கப்பிரதிநிதிகள் பொருளாதார உதவிகள், புயல் நிவாரணங்கள் மற்றும் கலாசார உறவுகளைப் பேசி தமிழகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றமை தெளி வாக வெளிப்படுகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் தத்தமது மாநில அரசியல் நலன்களுக்காக முடிவுகளை எடுத்தாலும், தாயகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அவற்றின் ஒட்டுமொத்த பின்கள கூட்டாதரவு என்பது சிதைக்கப்பட முடி யாதவொரு கேடயமாகும்.
தற்போதைய தாயகத்தின் அரசியல் தேக்க நிலைச்சூழலில் விமர்சனங்களுக்கு அப்பால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையி லான அணியினரின் இந்தப் பயணம் வெறும் சந்திப்புகளுடன் நின்றுவிடாமல், தமிழகத்துக்கும், தாயகத்துக்கும் இடையிலான பாரம்பரிய இரு தரப்பு உறவை பலமான அரசியல் சக்தியாக மீளக்கட்டியெழுப்ப வேண்டும்.
கடந்தகாலத் தலைவர்கள் விட்டுச்சென்ற தொடர்பாடல் இடைவெளியை பூர்த்தி செய் வதும் தமிழகத்தின் ஆதரவை வலுவான அரசி யல் அழுத்தமாக மாற்றுவதும் தற்காலத்தின் கட்டா யமாகும். இந்த விடயத்தில் தாயகத் தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இத்தகைய உறவுகளைப் புதுப்பிப்பதன் மூலம் கொழும்பின் ஒற்றையாட்சி முனைப்புகளையும், அரசாங்கத்தின் ஏட்டிக்குப் போட்டி நகர்வுகளையும் முறியடிக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வாறான ஒன்றிணைவு நிகழப்போவதில்லை. கஜேந்திரகு மார் அணி தமிழகத்தினை மையப்படுத்திய நகர்வை முன்னெடுத்திருக்க அதற்கு போட்டியாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்திக்கும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடிக்கு கூட்டுக் கடிதமொன்றை வழங்குவதற்கு தயாராகி வரு கின்றனர்.
இந்தச் செயற்பாடு, நீங்கள் தமிழகத்துக்கு போய் தான் டில்லியை வழிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள், நாங்கள் நேரடியாக டில்லி யையே கையாளப்போகின்றோம் என்ற ‘அரசியல் போட்டியின்’ வெளிப்பாடும் கூடவே இந்திய மையவாத நலன்களையும் நிலை நிறுத்துவதாகவே உள்ளது.



