டித்வா புயலின் தாக்கத்தை நிவாரண அரசியலாக்கும் அரசியல்வாதிகள் :தாமோதரம்பிள்ளை பிரதீவன்

1 75 டித்வா புயலின் தாக்கத்தை நிவாரண அரசியலாக்கும் அரசியல்வாதிகள் :தாமோதரம்பிள்ளை பிரதீவன்
அம்பாறை மாவட்டத்தில் டிற்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நிவாரண நிலைமை என்ன?
டிற்வா புயல் நாடு முழுவதும் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி 639 பேர் உயிரிழந்த னர். 300க்கும் மேற்பட்டோர் காணாமல் உள்ளனர். கண்டி, கேகாலை, கொரோணாகல, பதுளை ஆகிய பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
அம்பாறையில் பெரிய அளவிலான அழிவு இல்லாவிட்டாலும் எட்டு உயிரிழப்புகள் பதிவாகின. தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, மக்கள் இடம்பெயர்ந்தனர், மின்சாரம்–குடிநீர்–போக்குவரத்து தடைகள் காரணமாக தொழில் இழப்பு ஏற்பட்டது. அம்பாறை மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் குறைவாகவே சென்றதாக மக்களிடையே கருத்து உள்ளது. இந்தியா 50 மில்லியன் ரூபாய் உதவி அறிவித்திருந்தாலும் அது எந்த அளவுக்கு நேராக வழங்கப்படும் என்பது தெளிவாகவில்லை. அதே சமயம் அம்பாறை மக்கள் தாங்களே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்களை சேகரித்து மலையகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் நிவாரண உதவிகளை அரசிடம் ஒப்படைப்பது சரியா?
மனிதாபிமான ரீதியில் உதவி அனுப்புவது அவசியம். ஆனால் தமிழர்கள் சேகரிக்கும் நிவாரணங்களை அரசிடம் கொடுக்கும்போது அரசியலாக்கப் படும் அபாயம், திசை திருப்பப்படும் அபாயம், இனவாத அடிப்படையில் பகிரப்படும் அபாயம் இருக்கிறது. சிங்கள மக்களிடம் நல்லெண்ணம் உருவாக வேண்டுமெனில் நிவார ணத்தை தமிழர்களே நேரடியாக வழங்குதல் மிகவும் பயனுள்ளதாகும். முன்னர்  தமிழீழ விடுதலைப் புலிகள் வெள்ள அனர்த்தத்தில் சிங்கள மக்களுக்கு உதவி அளித்தபோது அவர்களின் மனப்பான்மை மாறியது போல, இன்றும் நேரடி வழங்குதல் இனப்பிரிவை உடைக்கும் வழி. அதேபோல் இன்று சில இடங்களில்  பெளத்த மத குரு போன்றவர்கள் “இது சிங்கள மக்களுக்கு மட்டும்” என கூறி பொருட்களை வழங்கிய சம்பவங்களும் உள்ளன. எனவே புலம்பெயர் மக்களின் உதவி நம்பகமான தமிழ் அமைப்புகள் அல்லது செயற்பாட்டாளர்களின் வழியாக நேரடியாக மக்களிடம் சென்றடைய வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததற்கான காரணம் என்ன?
2009க்குப் பிறகு தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தாததால், மக்கள் அவர்களை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரண காலங்களிலும் கூட அரசியல் இலாபத் திற்காக செயல்படுவது மக்களின் வெறுப்பை அதிகரிக்கிறது. ஆனால் பொதுமக்கள் நேரடியாக தமிழர்களிடமிருந்து நிவாரணம் பெறும் போது அவர்களிடம் இருந்த தவறான புரிதல்கள் உடைந்து, நல்ல மனப்பான்மை உருவாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் இந்த மனிதநேய வாய்ப்பை மக்கள் ஒருமைப்பாட்டிற்கு பயன்படுத்தாமல், சொந்த அரசியல் லாபத்துக்காக திசைதிருப்புவது முக்கிய காரணமாகும்.
மனோ கணேசன் கூறியுள்ள “மலையக மக்களை புலம்பெயர் தமிழர்களின் காணிகளில் குடியேற்றலாம்” என்ற கருத்து எவ்வளவு பொருத்தம்?
இது ஒரு முழுமையான அரசியல் நாடகம். மலையக மக்களுக்கு அவர் இதுவரை என்ன செய்தார் என்பதிலேயே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. வடக்கு–கிழக்கில் இராணுவம் பிடித்திருக் கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன; அவற்றை விடுவித்து மக்களை குடியேற்றுவது முதன்மையான தீர்வாக இருக்க வேண்டும். அரசுக்குச் சொந்தமான காணிகளும் பல உள்ளன. இவற்றை பேசியே தீர்வு காணாமல், புலம்பெயர் தமிழர்களின் தனிப்பட்ட காணிகளை மட்டும் குறிவைப்பது அவரது அரசியல் நோக்கத்தை வெளிக்காட்டுகிறது.
ரணில், மைத்திரி, நாமல் போன்ற ஊழல்வாதிகள் நிவாரண தவறுகள் குறித்து அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக கூறுவது பற்றி என்ன  நினைக்கின்றீர்கள்?
இது மிகப் பெரிய நகைச்சுவை. நாட்டை பல தசாப்தங்களாக சுரண்டி  ஊழல் செய்தவர்கள் இன்று நிவாரண அரசியலை முன்னிலைப்படுத்தி “நாம் நீதி கேட்கிறோம்” என்று பேசுவது அவர்களின் இரட்டைப்பாங்கையும் பொய்மையும் வெளிப்படுத்துகிறது. சுனாமி அனர்த்தத்திலும், மனித புதைகுழிகள் வெளிப்பட்ட போதும் இவர்கள் நீதியை நாடவில்லை. இன்று இயற்கை அனர்த்தத்தை அரசியல் விளையாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர்.
தேசியத் தலைவர் உருவாக்கிய கால நிலை அவதானிப்பு மையத்தின் முக்கியத்துவம் என்ன?
போரின் நடுவிலும் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை காலநிலை அவதானிப்பு மையத்தை தேசியத் தலைவர் நிறுவினார். இன்று அரசியல் தலைவர்கள் நிவாரண அரசியலை மட்டுமே செய்கிறார்கள்; மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து கவனம் குறைந்துள்ளது. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.