சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் 19ஆம் திகதி கூடி, இலங்கையின் விரைவு நிதி திட்டம் குறித்து ஆராயவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை விரைவு நிதி திட்டத்தின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோரியுள்ளது. இந்த முறைமையின் ஊடாக மதிப்பாய்வுகள் இன்றி முன்கூட்டியே நிதியை பெற முடியும்.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வீதம், அடுத்த தசாப்தத்தில் பணியிடங்களுக்கு நுழையும் ஒரு மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க போதுமானதாக இருக்காது என்று உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் அரவிந்த் நாயர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தசாப்தத்தில் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்கள் பணியிடங்களில் நுழைவார்கள் என்றும், வளர்ச்சி வீதங்கள் இதே நிலையில் தொடர்ந்தால், உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை தேவையானதை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு மூன்று முதல் நான்கு சதவீதமாக இருக்குமென உலக வங்கி கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



