கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அறிவிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும், அதில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களும் அடங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களால் உரிமம் பெறக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் வரம்புகள், அதிக சோதனைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரிமங்களை மறுஆய்வு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்

“மக்களின் சூழ்நிலைகள் மாறுகின்றன, மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீவிரமயமாக்கப்படலாம், உரிமங்கள் நிரந்தரமாக வழங்கப்படக்கூடாது,” என்று  பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை 50 வயதான தந்தையும், 24 வயதான மகனும் மேற்கொண்டிருந்தனர். இதில் 50 வயதான தந்தை  உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார்  பயங்கரவாதச் செயலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.