வவுனியா வடக்கு திரிவைச்சகுளம் மற்றும் ‘கிவுல் ஓயா’ அபகரிப்பு: ரவிகரன் எம்.பி எதிர்ப்பு

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திரிவைச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்வரையில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ‘கிவுல்ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளமை என்பவற்றிற்கு    நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

மேலும்  ஆயிரம் பேர்வரையில் மக்களைத் திரட்டி வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டாமெனத் தெரிவித்த வவுனியாமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, ஒருமாதகாலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதுதொடர்பில் தாம் கவனஞ்செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (09.12.2025) இடம்பெற்றநிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.