உள்ளக விளையாட்டரங்கு அமைப்பு பணிகளுக்கு யாழ் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று (05) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணி கையகப்படுத்தப்பட்டு, அதில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் இதற்காக அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படுவதால் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என்றும் அமையவுள்ள விளையாட்டரங்கினை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் விளையாட்டரங்கு அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துவதற்கு, 14 நாட்களுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கிய மன்று, எதிர்தரப்பினை தமது ஆட்சேபனைகளை முன் வைக்கவும் அவகாசம் வழங்கியுள்ளது.