தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்  மாணவர் சக்தியை என்றைக்கும் யாராலும் அடக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் வழமைபோன்று இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன் இரு நாட்கள் கற்றல் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பபில்ராஜுடனான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி – மாவீரர் நாளையொட்டி பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தமை பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – கடந்த காலத்தில் குறிப்பாக 2015ற்கு முன்னரான காலப் பகுதியில் மாவீரர்களை நினைவுகூற வெளிப்படையாகவே தடைவிதிக்கப்பட்டு குறிப்பிட்ட மாவீரர் நினைவு வாரக் காலப்பகுதியினை உள்ளடக்கிய ஒரிரு வாரங்கள் பல்கலைக்கழகம் மூடப்பட்டு இராணுவத்தினரை பல்கலைக்கழக புறச்சூழலில் குவித்து முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இருக்கும்.

அன்றைய சூழல் 2015 உடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இவ்வளவு காலமும் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமல்லாமல் தமிழர் தாயகம் முழுவதும் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து வந்த நிலையில் 2019ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஒரு வகையான பயப்பீதி மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் நினைவேந்தலிற்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில் தாயகம் எங்கிலும் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தடைகள் எதுவுமின்றி நினைவேந்தல் இடம்பெறும் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது.இருப்பினும் கடைசி நேரத்தில் தடைவிதிக்கப்பட்டமையானது பல்கலைக்கழக நிர்வாகம் தம்மை தற்பாதுகாக்க மேற்கொண்ட முயற்சியே ஆகும்.

தம் உயிரிலும் மேலான தமிழினத்தின் மகத்தான இலட்சியப் பயணத்திற்காக மீளாத்துயில் கொள்ளும் மாவீரர்கள் மக்களின் மனங்களில் குடிகொள்வதால் தடைகள் போடுவதன் மூலமாக கட்டுப்படுத்திவிட முடியாது. மாவீரர்நாள் நினைவேந்தல் எப்போதாவது பல்கலைக்கழகத்தில் இடம்பெறாமல் இருந்ததும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.BabilRaj தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்

கேள்வி – இவ்வாறான பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டபூர்வமானதா?இது மாணவர்களின்  உரிமைகளை புறந்தள்ளுவதாக அமையாதா?

பதில் – பல்கலைக்கழக நிர்வாகம் முன்னொரு போதும் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்ததில்லை. அது மாத்திரமன்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாவீரர் நாள் நிகழ்வுகளினை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளக் கூடாது என தடைவிதித்திருந்தால் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அல்லவா மாவீரர்நாள் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது பல்கலைக்கழக நிர்வாகம் சில அழுத்தங்களினால் தன்னிச்சையாக எடுத்த முடிவு ஆகும்.

மாணவர்களின் உரிமைகளை நசுக்கும் செயற்பாடு மட்டுமல்லாமல் இன்று வரைக்கும் தமிழின அடக்குமுறைகளிற்கு எதிராக என்றைக்குமே முன்நிற்கும் பல்கலைக்கழக சமூகத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்வது ஒட்டுமொத்தமாக எமது இனத்திற்கான பயணப் பாதையில் இருந்து தடம்மாறிப் பயணிக்க முயல்கிறது. ஆனாலும் அதற்கு மாணவர் சக்தி ஒருபோதும் இடம் கொடுக்காது.

கேள்வி– யாழ்ப்பாணத்தில் மாவீரர்க ளுகான கல்வெட்டுக்களை பல நாள் முன்னேற்பாடுகளூடாக செய்து விளம்பர நினைவு கூரலை ஒரு தரப்பினர் இம்முறை செய்யஇ பல்கலைக்கழக மாணவர்கள் வருடந்தோறும் உணர்வெழுச்சசியுடன் வணக்கம் செலுத்தும் நடவடிக்கையை தடுக்க முனைந்தமை அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நகர்த்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை என சிலர் கருதுகிறார்கள்இ இதுபற்றி மாணவர்கள் என்னகருத்தினை பகிர்ந்து கொண்டார்கள்?

பதில் – நாம் மேலே குறிப்பிட்டது போன்றும் நீங்கள் குறிப்பிட்டது போலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் தடைவிதிக்கப்பட்டமை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்துள்ளார்களோ என்பது தொடர்பாக எம்மால் தெளிவாக குறிப்பிட முடியாது.மாணவர்களைப் பொறுத்தவரையில் இது நிர்வாகம் திட்டமிட்டு தன்னைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சியாகவே நோக்கப்படுகிறது.

கேள்வி– இவ்வாறான நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சியான சமூக தலைமைத்துவ முன்னெடுப்புக்களை தடுக்கும் என நினைக்கிறீர்களா?

பதில்– மாணவர்களின் செயற்பாடுகளை இத்தகைய செயற்பாடுகள் மூலமாக முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றால் அன்றைய நாளில் நினைவேந்தல் இடம்பெறாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் மூலமாக மாணவர்களின் பங்குபற்றலை குறைக்க தான் முடியுமே தவிர ஒட்டுமொத்தமாக தடுக்க முடியாது.

மாவீரர் நாள் நினைவேந்தல் என்பது சிங்கள மக்களிற்கு எதிரான ஒன்றாகவோ அல்லது அரசிற்கு எதிரான ஒன்றாகவோ நோக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. எமக்காக போராடி மடிந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் ஓர் உணர்வு ரீதியான அம்சமாகும்.

கேள்வி – கடந்த ஆறு மாதங்களின் முன்னர்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை அதன் பின்னர் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னின்றமை இ டிசம்பர் 26ம் திகதி தடை உத்தரவுஇ ஒன்றிய தலைமைகள்  முனைப்புடன் பங்குபற்ற முடியாமை  என்பனவற்றை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில் – மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டமை மற்றும் இன்றைய தடை உத்தரவு அனைத்தும் மாணவர் ஒன்றியம் தமிழ்த் தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் பங்குகொள்வதை தடுக்கும் நோக்கிலான செயற்பாடுகள் ஆகும். கட்சிகளை ஒன்றினைக்க எடுத்த முயற்சி தொடர்பில் இதனோடு கூறுவது பொருத்தப்பாடாக அமையாது.

கேள்வி – இன்றைய சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவ்வாறு தம் சமூக முற்போக்கு மாதிரி தலைமை பண்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பதில்– முன்னைய காலங்களைப் போன்று அண்மைக்கால பல்கலைக்கழக சமூகம் மாணவர்களிடத்தில் சமூகப் பொறுப்புணர்வுகளினை ஊட்டி வளப்படுத்தும் நிலை அருகிச் செல்லும் நிலைகாணப்படுகிறது. இன்றைய இளைஞர்களே நாளைய வழிகாட்டிகள் என்பதனை இன்றைய பல்கலைக்கழக மாணவர்களில் பலரும் உணர்ந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய நகர்வுகளை கூட்டாக முன்னெடுத்துச் செல்ல ஏனையவர்களும் ஒத்துழைத்துச் செயலாற்ற வேண்டும்.