போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கருத்து

உக்ரைனில் இறையாண்மை, வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்று  உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், “புவியியல் ரீதியான எல்லை குறித்த விஷயங்களில் தீர்வு காண்பது மிகவும் கடினம்” என்றார்.

ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்த டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகளை விட்டுத் தர வேண்டும் எனறு வலியுறுத்துகிறது. ஆனால், உக்ரைனோ அந்த பகுதிகளை விட்டுத்தர முடியாது என்று திட்டவட்டமாக மறுக்கிறது.

பாரிஸில் பிரெஞ்சு அதிபர் மக்ரோங்கை சந்தித்த பிறகு ஸெலன்ஸ்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களையும் அவர் சந்தித்திருந்தார்.

அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் ஃபுளோரிடாவில் 2 நாள் பேச்சுவார்த்தை முடித்துள்ளனர். ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படும் அமைதித் திட்டத்தில் சில திருத்தங்களை செய்வது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.