நாட்டில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களைத் தடுப்பதற்காக முன்னைய அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கட்சிப் பிரதிநிதிகளுக்கு ரணில் விக்ரமசிங்க விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, டித்வா புயல் நிவாரணம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (01) சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் இன்றைய தினம் (01) பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
எனினும், அரசாங்கத்தின் சார்பில் இதற்கு பதிலளித்த சபை முதல்வர் இன்றைய தினம் திட்டமிடப்பட்ட வகையில் வரவு செலவு திட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் மதியம் 12.30 வரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள், எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என்றும் பதிலளித்திருந்தார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த விடயத்துக்கு உடன்படாது, சபையிலிருந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி, ரெலொ தரப்பு விவாதத்தில் இருந்து வெளியேறின.
பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் உரையாற்றிய சாணக்கியன், தங்களது பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை தாக்கிய புயல் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் நீர்தேக்கங்களில் இருந்து அரசாங்கம் உரிய முறையில் முன்கூட்டியே நீரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தனர்.



