வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நவம்பர் 30ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் 17 அன்று, வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (வயது 78) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமாலுக்கு மரண தண்டனை விதித்தது.
அவாமி லீக், அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “தீர்ப்பாயத்தின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல்களில் இருந்து ஹசீனாவையும் அவரது கட்சியையும் விலக்கி வைப்பதற்கான முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்தின் அரசியல் ‘சதியின்’ ஒரு பகுதியாகும்” என்று குற்றம் சாட்டியது.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்த அந்தக் கட்சி, அதை ‘சட்டவிரோதம்’ என்று கூறி, முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது.
யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ‘விடுதலைக்கு எதிரானவர்கள்’ (வங்கதேச விடுதலையைக் குறிப்பிட்டு) மற்றும் ‘தேச விரோதிகள்’ என்று அவாமி லீக் குற்றம் சாட்டியுள்ளது.
“வங்கதேசத்தில் போலித் தேர்தல்கள் அனுமதிக்கப்படாது. அது நிச்சயம் எதிர்க்கப்படும்” என்றும் அக்கட்சி கூறியுள்ளது.



