கனடாவின் பிரம்ரன் (Brampton) நகரம் ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை அங்கீகரித்து நகர முதல்வரே ஏற்றியமை, ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரைச் சிறிலங்கா இனஅழிப்பே செய்ததென நீதியின் குரலாக ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எழுந்தமை, தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சியை ஈழத்தமிழர் அடைவதற்கு இந்திய மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளமை போன்ற ஈழத்தமிழருக்கு உற்சாகம் அளிக்கும் நிகழ்வுகளுடன் 2025ம் ஆண்டின் ஈழத்தமிழர் மாவீரர் வாரம் உலகெங்கும் உலக இனமாக உள்ள ஈழத்தமிழர்களாலும், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழும் ஈழத்தமிழர்களாலும் உற்சாகமாக முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளது.
வரலாற்று இறைமையை மீளுறுதி செய்வதற்குச் சிக்கல்கள் வரும்பொழுது உயிரைக் கொடுத்துப் போராடி அந்த உயிர்த்தியாகங்கள் மூலம் இறைமையை உறுதி செய்யலாம் என்பது இன்றைய இறைமை குறித்த ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இதனால்தான் ஈழத்தமிழர்களின் இறைமையை மாட்சிப்படுத்திய மாவீரர்களை ஈழத்தமிழர்கள் மாட்சிப்படுத்தும் மாவீரர் நாள் 27.11.2025இல் ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளாக எழுச்சியுடன் கொண்டாடி ஈழத்தமிழர் தாயகத்தின் இருப்பை சிறிலங்காவின் இனஅழிப்பு உட்கட்டுமான அழிப்பு என்பவற்றையும் கடந்து உலகுக்குத் தெளிவுபடுத்தி வருகிறார்கள். கொண்டாட்டம் என்பது நன்றி தெரிவிக்கும் நாளாகவே வரலாற்றில் பரிணமித்தது என்பதை மீள்நினைவுபடுத்தி, அனைத்து ஈழத்தமிழர்களும் நன்றியுடன் தேசிய ஒருமைப்பாடு கொண்டு தேசமாக எழுந்து மாவீரதீபமேற்றும் மாவீரர் துயிலகங்களுக்கும் தாயகத்துக்கு வெளியே இலங்கையிலும் தமிழகத்திலும் உலகெங்கும் மாவீரர் துயிலக மாதிரிகள் அமைக்கப்பட்ட அனைத்து மண்டபங்களுக்கும் திரண்டெழுந்து சென்று, மாவீரத் தீபமேற்றி ஒவ்வொருவரும் தாயக வரலாற்றுக்கடமையைச் செய்தாக வேண்டுமென்பதை இலக்கு நினைவுறுத்த விரும்புகிறது.
தமிழிலக்கிய மரபில் புறத்திணை 34 பாடலில் புலவர் ஆலந்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பல்லாண்டு வாழ்கவெனப்பாடுகையில் “நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்” எனப்பாடிய வரிகளில் செய்தி என்பது வரலாறு என்ற பொருளில் பாடியுள்ளார். உலகமே கீழ் மேலாகப் பெயர்ந்து அழியுமாறு ஆயினும் ஒருவனுடைய வரலாற்றை அழித்தவர்க்கு உய்வில்லை என்பது இதன் பொருள். மாவீரர்நாள் ஈழத்தமிழர் வரலாற்று நாள். மாவீரர்கள் வரலாறு என்பதே ஈழத்தமிழ் தாயகத்தின் வரலாறு. மாவீரர்களது வரலாற்றை உலகுக்கு வெளிப்படுத்த மறக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் ஆலந்தூர் கிழார் உடைய இந்தப்பாடல் எச்சரிக்கை செய்கிறது. ஊடகங்களை சமுக ஊடகங்களை நடாத்தும் ஒவ்வொரு ஈழத்தமிழரும் மாவீரர் வாரத்திலாவது மாவீரர்களின் வரலாற்றை வெளிப்படுத்தி ‘செய்தி கொல்லாத’ தமிழ்ப்பண்பாட்டை மீள் நிலைநிறுத்தும் வரலாற்றுக்கடமையைச் செய்ய வேண்டும் என்பதை இலக்கு நினைவுறுத்த விரும்புகிறது.
ஈழத்தமிழர் தாயகத்துத் தேசிய நாளுடன் ஈழத்தமிழர்களை 400 ஆண்டுகால அடிமைத்தனத்தில் இருந்து விழித்தெழ வைத்து தேசமக்களாக தாயகத்தைப் பேணும் தேசிய விடுதலைப் போராட்டத்தை உறுதியுடன் விடுதலை அடையும் வரை தங்கள் வாழ்வாகவே வாழ வைக்கும் மரபணுவாக மாற்றிய 31 ஆண்டுகால ஈழத்தமிழர் தாயக நடைமுறையரசின் அரசத்தலைவர் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஈழமண்ணில் தோற்றிய நாளும் 26.11. 1954 இல் அமைகிறது. புதுவை இரத்தினதுரை அவர்கள் தேசியத்தலைவரின் 50 வது அகவையில் வாழ்த்துரைத்த “உலகம் உள்ளவரை உனக்கு வயது” என்ற கவித்தலைப்பை நனவாக்கி ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் நவம்பர் 26 ஐ, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மூச்சாகப் பேச்சாக செயற்பட வைக்கும் பேராற்றலாகத் தங்களுடன் வாழும் தங்கள் தேசியத்தலைவருக்குப் பிறந்தநாள் கொண்டாடுதல் ஈழத்தமிழர் மரபாக உள்ளது. இந்த தேசியத் தலைமை போற்றும் முறைமையும், மாவீரரை மாட்சிப்படுத்தும் முறைமையும், தலைவரதும் மாவீரர்களினதும் நோக்கை அடைவதற்கான மக்கள் போராட்டங்களை சனநாயக வழிகளில் தமிழர் ஒருங்கிணைப்பின் வழி அமைகின்ற பொழுதே, அர்த்தமுள்ள முறைமைகளாக அமையும் என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
இன்று உலக வல்லாண்மையான அமெரிக்கா நாடுகளுடன் கூட்டாண்மை பங்காண்மை வழி தனது மேலாண்மையை நிலைநிறுத்தும் தீர்வுகளையே போராடும் மக்களின் மேல் மக்களின் பங்களிப்பு இன்றியே போராட்டங்களை முடிப்பதற்கான முடிவாக மாற்றி வருவதை காசா முதல் உக்ரேன் வரை உலகம் தெளிவாகக் காண்கிறது. மேலும் இனஅழிப்புச் செய்தும் நாட்டின் உட்கட்டுமானங்களைத் திட்டமிட்ட முறையில் அழித்தும் மக்களின் நாளாந்த வாழ்வில் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் விடுதலைப்போராட்டங்களை அனைத்துலகச் சட்டங்களுக்கு மதிப்பளியாது ஒடுக்கும் முறைகள் இன்று உலக வழக்காகி விட்டதை காசாவிலும் உக்ரேனிலும் தெளிவாக உலகம் காண்கிறது. இத்தகைய ஆபத்தான சமகால உலக அரசியல் ஒழுங்கு முறையில் ஈழத்தமிழர்கள் தங்கள் தேசியத்தலைவனின் வழிகாட்டலான ‘மக்கள் பலத்தை’ நம்புதல் வழியாகவே ஈழத்தமிழரின் இறைமையைப் பாதுகாக்க முடியும்.
ஈழத்தமிழ் மக்களின் அறியாமையையும் வறுமையையும் நீக்கும் செயல்திட்டங்களைப் பெருக்கியே மக்களின் இறைமையை மக்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வை வளர்ச்சிகளை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான மதியும் நிதியும் வழங்க வல்ல செயலாற்றல் மையங்களை உலகத் தமிழினமாகவுள்ள ஈழத்தமிழர்களே தாம் வாழும் உலக நாடுகளில் உருவாக்க வேண்டும். பின்னர் சிவில் சமுக அமைப்புக்களை ஒவ்வொரு நிலையிலும் உருவாக்கிப் பலப்படுத்தியே இதனைச் செய்யலாம் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. ஆனால் இதற்கான அனைத்துத் தடைகளையும் ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தையும் தேசிய நீக்கத்தையும் தனது அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்டுள்ள இன்றைய சிங்கள பௌத்த ஆதரவு அரசான தேசிய மக்கள் சக்தி அரசு, ஈழத்தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் ஏற்படுத்தி ஈழத்தமிழரின் தேச நிர்மாணச் செயற்பாடுகளைத் தடுக்கும் என்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் நன்கு தெரியும். இதற்கு உலகத் தமிழினமாகவுள்ள ஈழத்தமிழினம் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பல்லின மக்களினதும் ஆதரவை ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்புக் கவசமாகக் கட்டியெழுப்புவதன் வழியாக அனைத்துலகச் சட்டப்பாதுகாப்பை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறே உலக வர்த்தகத்துடன் தமிழர் தாயகத்தை இணைப்பதன் மூலமே வறுமை ஒழிப்பையும் உலகப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் ஈழத்தமிழர் தாயகக் கல்வியை இணைப்பதன் வழியாகவே அறியாமை நீக்கத்தையும் செய்ய வேண்டும். இவற்றைத் தாயகத்தில் சிறிலங்காவின் ஆட்சிக்குள் இருக்கும் ஈழத்தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையுடன் கூடிய கூட்டாட்சியினைத் தோற்றுவிப்பதன் வழியாகத்தான் தாயகத்தில் நடைமுறைப்படுத்த முடியும். இதனாலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழக அரசு இந்திய மத்திய அரசை இத்தகைய தீர்வுக்கு சிறிலங்காவை நெறிப்படுத்துமாறு திருமாவளவன் மூலம் திராவிட முன்னேற்றக்கழக மாநில அரசைக் கோரியுள்ளார். இந்த ராஜதந்திர நகர்வின் வழியாகத்தான் சுவிஸ் அரசாங்கத்தின் பங்காண்மையுடன் யேர்மன் நோர்வே பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளின் கூட்டாண்மையுடன் சுவிஸில் காணப்படும் கூட்டாட்சி முறையை ஒத்த அதைவிடப் பலவீனமான அரசியல் அதிகாரப் பகிர்வை கொண்ட நிர்வாக விரிவாக்கத்தினை புதிய அரசியலமைப்பில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிப்பதைத் தடுக்க இயலும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




