காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா நகரின் கிழக்கு ஜீட்டூன் பகுதியில் உள்ள மத அறநிலைய அமைச்சகத்தின் கட்டடம் தாக்கப்பட்டதில் ஒரு பெண் மற்றும் ஒரு இளம் பெண் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

ஐந்து வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு நகரமான கான் யூனிஸில் தனது வீரர்கள் செயல்படும் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறிய இஸ்ரேல் இராணுவம் இதையடுத்து “ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளை” தாக்கியதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகால பேரழிவு தரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் காஸா திட்டத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பின்னர் இந்த வன்முறை வெடித்துள்ளது.

காஸாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் பிபிசியிடம் கூறுகையில், புதன்கிழமை மாலை காஸா நகரம் மற்றும் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான், ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் பல இடங்களைத் தாக்கின என்றார்.

இந்த தாக்குதல்கள் கடந்த பல நாட்களாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய பின்னர் அதிகரிக்கும் பதட்டத்தை குறிக்கின்றன என்று அவர் கூறினார்.