இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டிருந்த பாலத்தீன சிறைவாசிகளில் குறைந்தது 94 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக பிரபல மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஃபிசியன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இஸ்ரேல் (பி.ஹச்.ஆர்.ஐ) அமைப்பு வெளியிட்ட “சிஸ்டமேடிக் கில்லிங்ஸ் அண்ட் கவர்-அப்ஸ்” என்கிற புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இஸ்ரேல் – பாலத்தீன் மோதல் தொடங்கிய அக்டோபர் 7, 2023-இல் இருந்து ஆகஸ்ட் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் கவனம் செலுத்துகிறது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 30-க்கும் குறைவான பாலத்தீனர்களே இஸ்ரேல் காவலில் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய சிறை சேவை (ஐபிஎஸ்), “தாங்கள் சட்டத்திற்கு உட்பட்டும் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் மேற்பார்வையிலுமே செயல்படுவதாக.” பிபிசியிடம் தெரிவித்தது.
வெளி அமைப்புகளிடமிருந்து வரும் தரவுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தான் பதிலளிப்பதில்லை என ஐபிஎஸ் தெரிவித்துள்ளது.
“அனைத்து சிறைவாசிகளும் சட்ட நடைமுறைகளின் படியே சிறைவைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ உதவு, சுகாதாரம், போதிய வாழ்நிலை போன்றவற்றுக்கான அவர்களின் உரிமைகள் தொழில்முறையில் பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களால் வழங்கப்படுகிறது,” என்றும் தெரிவித்துள்ளது.


