பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என பங்களாதேஷில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை உறுதியானதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்துடன், அங்கிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தெரிவு செய்யப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



