விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக நிதி பரிமாற்றப்பட்டதாக NIA மீண்டும் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக, இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கராச்சிக்கு நிதி அனுப்பியதாக, இந்தியப் புலனாய்வு சேவையான NIA தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுமலர்ச்சி தொடர்பான சதித்திட்டம் குறித்த விசாரணையில், இது கண்டறியப்பட்டுள்ளதாக NIA தரப்பைக் கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் குணா என்கிற சி.குணசேகரன், கராச்சியைச் சேர்ந்த பிரபல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஹாஜி சலீமின் கூட்டாளிகளுக்குச் சட்டவிரோத போதைப்பொருள் நிதியை மாற்றியதாக NIA கண்டறிந்துள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு பெரிய சதி இருந்ததை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை NIA நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக, இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் 2022 மார்ச் 15 அன்று, இலங்கையைச் சேர்ந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரான புஷ்பராஜா என்கிற பூக்குட்டி கண்ணா, திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு தடுப்பு முகாமில் மற்ற குற்றவாளிகளுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் என்றும், இந்திய ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குணசேகரன் மற்றும் அவரது மகன் திலீபனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சான்றுகளில், கிரிப்டோகரன்சி வழியாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் தொடர்பான தகவல்கள் அடங்குகின்றன. இது தமிழீழ விடுதலை புலிகளுடன் நேரடி தொடர்புகள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகளை நிரூபிக்கிறது என்று NIA அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.