யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமைதை எப்படி நியாயப்படுத்த முடியும். இந்த அமைச்சுக்கான பெருந்தொகையான நிதியை ஒதுக்கிடுவது நாட்டின் சமாதானத்தையோ, பொருளாதார அபிவிருத்தியையோ உறுதிப்படுத்த எந்த வகையிலும் பங்களிக்காது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கையின் பொருளாதார குறிகாட்டியானது ஆசிய நாடுகளில் பல்வேறு நாடுகளை விடவும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இலங்கை பின்பற்றிய தவறாக அரசியல் பொருளாதார,கல்வி மற்றும் சமூக கொள்கைகளினால் பொருளாதாரத்திலும் சமூக விழுமியங்களிலும் பின்தள்ளப்பட்டு இனக் குழுக்களுக்கு இடையே முறுகல்கள் ஏற்படுத்தப்பட்டு இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரனை,வரி விதிப்புகள் மற்றும் வீண் விரயத்தை குறைத்தல், உள்ளாச பிரயாணிகளின் வருகை ஆகிய நடவடிக்கைகள் மூலம் வருமானங்களை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உறுதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இதனை தக்க வைப்பதற்கு தொடர்ச்சியான இறுக்கமான நிதி நிருவாகத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துடன் நாட்டை மீள கட்டியெழுப்பும் அரசியல் பொருளாதார,கல்வி கொள்கைகளை வகுக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதுவே நாட்டின் எதிர்கால போக்கை எதிர்வு கூறும், நாட்டின் சமானத்திற்கான அடிப்படையாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அமைச்சுகள் சில தவறவிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு, விவசாயம், காணி, நீர்பாசன உள்ளிட்ட அமைச்சுகளுக்கு பெரிய தொகைகள் ஒதுக்கப்படவில்லை. ஆனால் போர் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு மிகவும் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 455 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீதமாகும். இந்த ஒதுக்கீட்டை எந்தளவில் நியாயப்படுத்த முடியும் என்று கேட்கின்றேன். இந்த பாரிய ஒதுக்கீடு இந்த நாட்டின் சமாதானத்தையோ, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியையோ ஏற்படுத்த எந்த வகையிலும் பங்களிக்கப் போவதில்லை என்பதனை கூறிக்கொள்கின்றேன்.
இதேவேளை நாட்டின் மனித வள மேம்பாட்டுக்கு மிகவும் அவசியமான மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மன வருத்தத்தை தருகின்றது. நிதி ஒதுக்கீட்டை செய்து அதனை செலவு செய்வதால் மாத்திரம் மாற்றம் ஏற்படப் போவதில்லை. அந்த செலவால் ஏற்படக்கூடிய விளைவை அளக்கக்கூடிய வகையில் எதிர்கால திட்டங்கள் அமைய வேண்டும் என்றார்.



