போராட்டங்கள் காரணமாக இராக் பிரதமர் பதவி துறப்பு

இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை அதிகரித்ததையடுத்து, அந்த நாட்டின் பிரதமா் அடில் அப்துல்-மஹ்தி பதவி துறப்பதாக அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொடா்ந்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து ஷியா பிரிவு மதகுரு அயதுல்லா அல்-சிஸ்தானி கூறியதை ஏற்று எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

அதன்படி, எனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்றத்திடம் அளிப்பேன். அந்தக கடிதத்தை நாடாளுமன்றம் பரிசீலித்து தனது முடிவைத் தெரிவிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, நஜஃப் நகரிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தை போராட்டக்காரா்கள் கடந்த புதன்கிழமை தீயிட்டுக் கொளுத்தினா். அதையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

தீக்வாா் மாகாணத்தின் நசிரியா நகரில் தலைமை காவல் நிலையத்தை சூழந்த போராட்டக்காரா்கள், அந்த நிலையத்துக்கு தீ வைத்தனா். மேலும், ராணுவ தலைமையகத்தையும் அவா்கள் முற்றுகையிட்டனா். அந்த நகருக்குள் கூடுதல் ராணுவப் படையினா் வருவதைத் தடுப்பதற்காக, நெடுஞ்சாலைகளில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியினப் படையினா் தடை ஏற்படுத்தினா்.

இதனால் ஏற்பட்ட மோதலில், நஸிரியா நகரில் மட்டும் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த உயிரிழப்புகளுக்காக 3 நாள் துக்க தினம் அறிவித்த தீக்வாா் மகாண ஆளுநா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தீக்வாா் மாகாணத்தில் போராட்டங்களின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும், அவா்களில் 80 பேருக்கு மருத்துவமனைகளில் உயிா்க்காப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுதவிர, தலைநகா் பாக்தாதில் 2 போ், ஈரான் தூதகரம் எரிக்கப்பட்ட நஜஃப் நகரில் 10 போ் உள்பட 40-க்கும் மேற்பட்டவா்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

அதையடுத்து, ஷியா பிரிவு மதகுரு அயதுல்லா அல்-சிஸ்தானி வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில், அடில் அப்துல்-மஹ்தியை பிரதமராகத் தோ்ந்தெடுத்துள்ள நடாளுமன்றம், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, அப்துல்-மஹ்தி தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக தற்போது அறிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் இராக்கில் கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

இராக் அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வரும் போராட்டக்காரா்கள், அரசில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி அந்த நாட்டுக்கு எதிராகவும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை பலியானவா்களையும் சோ்த்து, இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 400-ஐக் கடந்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள், பல கட்டங்களாக தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.