கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 9 ம் திகதி இஸ்ரேல் தனது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. கத்தார் நட்பு நாடு என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில் தான் வெள்ளை மாளிகையில் நேற்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார் நெதன்யாகு. அப்போது கத்தாரிடம் மன்னிப்பு கேட்கும்படி டிரம்ப் வலியுறுத்தினார். இதையடுத்து நெதன்யாகு வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛ இஸ்ரேல் – கத்தார் உறவு பற்றி டிரம்ப் அதிருப்தியடைந்தார். அதுதொடர்பான கவலைகளை பகிர்ந்தார். இருநாடுகள் இடையே பல ஆண்டுகளாக இருக்கும் பரஸ்பர குறைகள் மற்றும் தகவல் பரிமாற்ற குளறுபடியை களைந்து நேர்மறையான உறவை உருவாக்குவதற்கான விருப்பத்தை வெளிக்காட்டினார்.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து நெதன்யாகு, கத்தார் பிரதமருக்கு போன் செய்தார். தோஹா தாக்குதலுக்கு நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை மீண்டும் நடத்தமாட்டேன் என்று உறுதியளித்தார்.
அதேபோல் இந்த மன்னிப்பை கத்தார் பிரதமர் அல் – தானி வரவேற்றார். பிராந்திய பாதுகாப்புக்கு அர்த்தமுள்ள வகையில் தங்கள் நாட்டின் பங்களிப்பை தர விரும்புவதாக அவர் உறுதி கூறினார்” என கூறப்பட்டுள்ளது. அதேபோல், நெதன்யாகு மன்னிப்பு கேட்டதை கத்தாரும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக கத்தாரின் வெளியுறவு அமைச்சகம், ‛‛இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கத்தார் பிரதமருடன் தொலைபேசியில் பேசி தோஹா தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார்” என்று கூறப்பட்டுள்ளது.



