பிரான்ஸ் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐநா சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அமைதிக்கான நேரம் வந்துவிட்டது என்றும் காஸாவில் நடைபெறும் போரை எதுவுமே நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருநாடு தீர்வுக்கான திட்டம் தொடர்பாக பிரான்ஸும் சௌதி அரேபியாவும் இணைந்து ஐநா பொதுச் சபையில் ஒருநாள் உச்சிமாநாட்டை நடத்தின. இதில் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக மக்ரோங் தெரிவித்தார். முடிவில்லா போர்களின் ஆபத்து பற்றி எச்சரித்த மக்ரோங், “என்றும் வலிமையை விட உரிமையே நிலவ வேண்டும்.” என்றார்.
மத்திய கிழக்கில் நிலைத்த அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமூகம் தோற்றுவிட்டதாகக் கூறும் மக்ரோங், “இஸ்ரேலும் பாலத்தீனமும் அருகருகே அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் இருநாடு தீர்வை உருவாக்க நமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.” என்றார்.
முன்னதாக பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.