புத்தர் பிறந்த நேபாளத்தில் இரத்தம் ஓடும் அவலம்..! : பா.அரியநேத்திரன்

புத்தபகவான் பிறந்த நேபாளத்தில் தற்போது வன்முறைகள் அதிகரித்து போராட்டம் வெடித்து கலவரத்தால் இரத்தம் ஓடும் அவலம் தொடர்கிறது..

நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன கலவரக்காறர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை முதல் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் பதவி விலகியுள்ளனர், பதவிவிலகினாலும் அவர்களை அடித்து துரத்தி ஆற்றில் வீசப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டுள்ளது.
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் நேற்று (09/09/2025) செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் அன்பு, அகிம்சை, அமைதி மற்றும் துன்பத்தைத் தவிர்ப்பதை மையமாகக் கொண்டுள்ளன. ஆசை அல்லது பற்றுதான் துன்பத்திற்குக் காரணம் என்று அவர் போதித்தார். நான்கு உயர்ந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்: துன்பம், துன்பத்திற்கானகாரணம் (ஆசை), துன்பத்தை நீக்குதல், மற்றும் துன்பத்தை நீக்குவதற்கான வழி (எண்மடங்கு பாதை). புத்தர், அன்பு மற்றும் கருணை, அகிம்சை, எளிமையான வாழ்க்கை, தர்மம், தியானம், மற்றும் உலக இன்பங்களை விட்டுவிடுதல் போன்றவற்றை தனது போதனைகள் மூலம் உலகிற்கு வழிகாட்டினார்.

புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் அதர்மமாக காட்சி தருகிறது. புத்தபகவான் பிறந்த மண்ணில் இவ்வாறு அதர்மம் தலை தூக்கியது. பௌத்த மதத்தை அரச மதமாக கொண்டுள்ள இலங்கை நாட்டுக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது என்பது உண்மை.

பத்தர்பகவானின் போதனை வெறும் ஏட்டுச்சுரக்காயாக நேபாளத்திலும் மாறியதா என்று சிந்திக்க வைக்கிறது.

இளவரசர் சித்தார்த்தராக, இயற்பெயருடன் பிறந்த புத்தர் கி. மு. 563ஆம் ஆண்டு பிறந்தார் எனக் கருதப்படுகிறது. புத்தர் பிறந்த, நேபாளநாட்டில் சாக்கிய இராச்சியத்தில் உள்ள லும்பினியானது நேபாளத்தின் லும்பினி பகுதியின் தற்போதைய ரூபந்தேஹி மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.