தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஒரு அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். மற்ற இரண்டு பத்திரிகையாளர்களும் அல் ஜசீரா மற்றும் என்பிசி நிறுவனங்களில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
முதல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது நடந்த இரண்டாவது தாக்குதலில் மற்றவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் தங்களின் ஒளிப்பதிவாளர் ஹுசாம் அல்-மஸ்ரியும் ஒருவர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுயாதீன பத்திரிகையாளரான மரியம் டாகாவும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 33 வயதான அந்த நபரின் மரணத்தால் “அதிர்ச்சியும் வருத்தமும்” அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றவர்கள் அல் ஜசீராவில் பணிபுரியும் முகமது சலாமே மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி சேனலான NBCயில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் முவாத் அபு தாஹா என்று கூறப்படுகிறது.
சிவில் பாதுகாப்புத் துறையின் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



