பட்டினி நிலையால் காசா பெரும் துன்பத்தில் சிக்குண்டுள்ளது – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

காசாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலையால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ள நிலையில்,  மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் உணவு மையங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்து பாதிக்கப்படு வருகின்றனர்.

இந்த நிலையில், காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார்.