நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக 11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மனிதாபிமான உதவிகளை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டுக்கான 10.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மொத்த இலக்கில் 23 சதவீதம் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
122 மில்லியன் மக்களின், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் அவசியமாக உள்ளதெனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தங்களுக்கான நிதி நிலைமை அபாய நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியுறவுகள் துறை பணிப்பாளர் டொமினிக் ஹைட் (Dominique Hyde) தெரிவித்துள்ளார்.
இதன்படி, 11.6 மில்லியன் அகதிகள் மற்றும் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கும் உதவிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களுக்கான பங்களிப்பை குறைத்துள்ள நாடுகளின் பட்டியலை அவர் வெளியிடாத போதிலும், அமெரிக்காவின் செயற்பாடு இதில் முக்கிய பங்களிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.