கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் எனப்படும் தென்கிழக்காசியாவின் கூட்டிணைவு மாநாட்டில் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உரையாடுகையில் “சிறிலங்கா ரஸ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடு எனவும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குச் சிறிலங்கா கடந்த அக்டோபரில் அனுப்பிய விண்ணப்பத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்நகர்வு வரவேற்கத்தக்கதெனவும், அதற்கு ரஸ்யா முழுமையான ஆதரவை அளிக்கும்” என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் மொத்த அதிகாரபூர்வமான டொலர் இருப்பு இன்று 600 கோடி டொலர்கள் என்ற நிலையில் இதில் ஒருபகுதி சீன விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டொலர் இருப்புப் பயன்பாட்டுக்கான நிவாரணமாக இந்தியா 100 கோடி டொலர்களை அதில் 80 கோடி டொலர்களுக்கு மேல் மானியங்களாகவே கொடுத்துள்ளது. அதே வேளை பிரித்தானியா வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் வளர்ச்சிக்கான வர்த்தகம் என்ற சிறப்புரிமையினை சிறிலங்காவுக்கும் வழங்கியுள்ளதால் சிறிலங்காவின் ஆடையுற்பத்தி போன்ற துறைகளுக்கான உள்ளீடுகளை சுதந்திரமாகப் பெறவும் உற்பத்தியினை வரிவிலக்குடன் பிரித்தானியாவில் சந்தைப்படுத்தவும் கூடிய பல வசதிகளைச் சிறிலங்கா பெற்றுள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அமெரிக்காவின் சிறிலங்காவுக்கான 30 வீத வரியினைக் கூட ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் சிறிலங்கா அமெரிக்காவின் வளர்ச்சிக்கான வேறு சலுகைகளை உறுதிப்படுத்தி மேலும் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூட சிறீலங்காவுக்கு இன்னமும் உண்டு என்பதையும் உணரவைக்கிறது.
அமெரிக்க சீன இந்திய பிரித்தானியாவின் கடந்தவார சிறிலங்கா குறித்த செயற்பாடுகள் சிறிலங்கா இன்றைய உலகின் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கும் தொழில்நுட்பப் போருக்கும் தனது எல்லா நாடுகளுடனுமான ‘ தந்திரோபாய நடுநிலை’ மூலம் எதிர்கொள்ளும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. சிங்களவர்களின் இறைமையைப் பாதுகாக்க 1948 முதலே சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இந்த “தந்திரோபாய நடுநிலை” போக்கை கடந்த 77 ஆண்டுகளாகவே தெளிவாகக் கையாண்டு வருகின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் உலக அரசியல் முறைமையுள் பக்கசார்பான நிலையினையே அன்றும் இன்றும் தொடர்ந்து எடுத்து வருவதாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகத்தில் அவர்களின் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தங்களின் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்களால் உறுதிப்படுத்த இயலாதுள்ளது. தந்திரோபாய நடுநிலை என்பது உணர்ச்சி அரசியல் விருப்பு வெறுப்பு அரசியலைக் கடந்து சமகாலத்தில் உள்ள உலக அரசியல் முறைமைகளின் அரசியல் பொருளாதார எதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு சமகாலப் பிரச்சினைகளுக்கு தங்களின் இறைமையைத் தேசியத்தை இழக்காது உரையாடல்கள் பங்காண்மைகள் கூட்டாண்மைகள் வழி ஏற்புடைய தீர்வுகளை உருவாக்குவது.
உதாரணமாக சிறிலங்காவின் இன்றைய ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியினரின் மூலவர்கள் 1965 இல் ரஸ்ய சீன சார்பான சிங்கள இடதுசாரி இயக்கமாகவே கருக்கொண்டவர்கள். அமெரிக்க எதிர்ப்பாளர்களாகவே உலகிற்கு அறியப்பட்டவர்கள். சிங்கள ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகளாகவே பிரகனடப்படுத்தப்பட்டவர்கள். பயங்கர வாதத்தடைச்சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர்கள். 1970 இல் இந்தியப்படைகளின் நேரடியான நெறிப்படுத்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் படைகளால் முதலிலும் பின்னர் மேற்குலக ஆதரவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பிரேமதாசாவின் ஆட்சியில் அடுத்தும் தங்கள் போராளிகளைப் பல்லாயிரக்கணக்கில் இழந்த வரலாறு உடையவர்கள்.
வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரால் நிறைந்தவர்கள். ஆயினும் அந்த வலிகளையும் வேதனைகளையும் பிரிவுகளையும் இழப்புகளையும் மீளவும் மீளவும் நினைந்து செயற்பாடின்றி சோர்ந்து ஒடுங்கிப் போகாது ‘தந்திரோபாய நடுநிலை’ யினை அரசியலாக்கியே இன்று அதே சிறிலங்காவின் ஆட்சியாளராக மட்டுமல்ல தம்மை ஒடுக்கிய பிராந்திய மேலாண்மைகள் வல்லாண்மைகள் தமக்கே உதவி செய்ய வைக்கும் ஆட்சியாளர்களாகவும் சிறிலங்காவில் விளங்குகின்றார்கள் என்பது ‘தந்திரோபாய நடுநிலை’ அரசியல் செயற்பாட்டின் சமகாலச் சான்றாக விளங்குகின்றார்கள். இதனால் தேசிய மக்கள் சக்தி தனது வரலாற்றின் நினைவை மறந்தவர்களாகவோ அதற்கான தண்டனை நீதியை மறந்து விட்டவர்களாகவோ இல்லை. தம்மைப்பபலப்படுத்தி எதற்காகத் தமது போராளிகள் உயிரிழந்தார்களோ ஊனமடைந்தார்களோ வாழ்விழந்தார்களோ அதனை சமகாலத்தின் ஒப்புரவுடன் நடைமுறைப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.
ஆனால் 1972இல் சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசின் பின்னர் அனைத்துச் சிங்களவர்களுமே அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலென்ன இடதுசாரிகளாக இருந்தாலென்ன ஈழத்தமிழர்களின் இறைமையை இனஅழிப்பு அரசியலால் ஒடுக்கி அவர்களின் நிலத்தை படைபலத்தால் ஆக்கிரமித்து தங்களின் சிங்கள கண்டி கோட்டே அரசுகளின் எல்லைகளைக் கடந்து ஈழத்தமிழரின் யாழ்ப்பாண – வன்னி அரசுக்களின் எல்லைகளை சிங்கள ஆட்சிக்குள் உட்படுத்தும் நோக்கும் போக்கும் உடைய அரசியலையே இலங்கைத் தீவில் படைபலம் கொண்டும் அரசபயங்கரவாதம் கொண்டும் செய்து வருகின்றனர். இதற்கு இவர்கள் மட்டுமல்ல என்றும் எந்தச் சிங்கள அரசுக்களும் கூட விதிவிலக்காக மாட்டாது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்து உலகிலும் ‘தந்திரோபாய நடுநிலைமை’ யைப் பின்பற்றி உலக நாடுகளுடனும் உலக அமைப்புக்களுடனும் தங்களது இறைமையைப் பாதுகாப்பதற்கான சனநாயக வழியிலான அனைத்து செயற்பாடுகளையும் உடன் தொடங்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது.
பிரித்தானிய அரசர் பிரான்சிய அரசத்தலைவரை அரசவிருந்தினராக அழைத்து பிரதமர் உட்பட அமைச்சர்கள் உடன் நடைபெற்ற சந்திப்புக்களும் இந்த ‘தந்திரோபாய நடுநிலை’ பால் பட்டதாகவே அமைகிறது. பிரித்தானியாவுக்கும் பிரான்சிற்கும் இடையில் எல்லைகளற்ற உறவு என்பது அறிவிக்கப்பட்டது. இதே பிரித்தானியாவும் பிரான்சும் எத்தகைய வரலாற்றுப் பகைமைகளை வெளிப்படுத்தின என்பது எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆயினும் அவற்றை யெல்லாம் கடந்து இருக்கின்ற வேறுபாடுகளுக்கு நடுவிலும் சமகாலத்தில் பாதுகாப்பான அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தந்திரோபாய நடுநிலை காலத்தின் தேவையாகிறது என்பதற்கு இது உலக உதாரணமாக உள்ளது. அதே வேளை பிரான்சின் எந்த முடிவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஏற்கப்பட வேண்டிய நிலை பிரித்தானியா பிரிக்சிட் மூலம் வெளியே வந்ததால் உள்ளது என்ற எதார்த்தமும் பேசப்பட்டதைக் காணலாம். ஆகவே இந்த சில உதாரணங்களை மனதிருத்தி ஈழத்தமிழர்கள் தந்திரோபாய நடுநிலையில் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணம். ஏனெனில் இன்று அமெரிக்க அரசத் தலைவர் “மிரட்டுதல் வழி பணிய வைத்தல் இல்லையேல் தாக்குதல் வழி தளரவைத்தல்” என்கின்ற தந்திரோபாயத்தை உலக அரசியலில் தோற்றுவித்து அனைத்து உலக அரசியல் முறைமையை செயலிழக்க வைத்துள்ள நிலையில் ஈழத்தமிழ் மக்கள் போன்ற சிறுதேச இனங்களின் இறைமையைப் பாதுகாத்தல் என்பது மக்களே இணையும் செயற்பாடுகள் மூலமே நடைமுறைச் சாத்தியமாக உள்ளது.
இந்நிலையில் சமகாலத்தில் செம்மணியில் சிந்துபாத்தியில் தகனமேடை அமைக்க முயன்ற பொழுது தொடங்கி சிறிலங்காவின் மனிதப் புதைகுழிகளில் இருந்து வெளியாகத் தொடங்கிய மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 65 ஐ தாண்டிய நிலையில் இது குறித்த அனைத்துலக விசாரணை மூலமே இதற்கான நீதியைப் பெற முடியுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறிலங்கா நடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிக முக்கியமானதாக அமைகிறது. அதே வேளை கட்சி பேதங்களைக் கடந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஈழத்தமிழர்களின் பொது கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முயற்சியாக அனைத்து ஈழத்தமிழ் அரசியல்வாதிகளையும் சந்திக்கும் திகதி குறித்த பயணத்தைத் தொடங்க இருப்பதும் முக்கியமாக காலத்தின் தேவையாக உள்ளது.
அதே நேரம் ஈழத்தமிழர்களும் “அனைத்துலக நீதி விசாரணையைக் கோருகின்றனர்” என்பதை உலகுக்கு வெளிப்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அனைத்துலக நீதி விசாரணைக்கான முன்னெடுப்புக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரி அனைத்து ஈழத்தமிழ் மக்களையும் யூலை 26ம் நாளில் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு வடக்கு-கிழக்கு சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கண்டுமணி லவகுசராசா அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்த ஈழத்தமிழ்மக்களின் போராட்டம் தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழமக்களின் பெருங்குரலாக அமைய ஈழத்தமிழ் மக்கள் தேசமாக எழுவதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே செய்ய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது.
ஆசிரியர்