குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர், காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் – உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில், நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது,நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார்.
காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அவர் இந்தக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்.