இஸ்ரேல் – ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார்.

ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தெஹ்ரானின் மையப்பகுதியிலிருந்து 3 இலட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. நேற்று இரவு முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.

இதனிடையே, கனடா ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்தார். சமீபத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினீர்களா? என்று ட்ரம்ப்பிடம் கேட்டபோது, ‘நான் எல்லோரிடமும் பேசிவிட்டேன்’ என்று பதிலளித்தார்.

மேலும், “ஈரானை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தினேன். ஈரானில் எந்த அணு ஆயுதமும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். இதற்காக நான் ஈரானுக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன், அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். 61-வது நாளில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். விரைவில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் அல்லது ஏதாவது நடக்கும். ஆனால், ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று அவர் கூறினார்.