இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், இராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடிதத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.