தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக் கூடியதாக மாகாணசபை தேர்தலை நடாத்தி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ துரிதகதியில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறிலங்காவின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சிறிலங்காப் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக்கூடியதாக மாகாணசபையை அமைத்தல் என்ற தேசிய மக்கள் சக்தி ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அடுத்த நடவடிக்கை என்பது இலக்கின் கருத்து.
மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் சிறிலங்கா மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனைகளும், சிறிலங்காப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனின் தனியாள் பிரேரணையும் கவனத்தில் எடுக்கப்படும் என்ற அமைச்சர் சந்தன அபேரத்னவின் கூற்று மாகாணசபைத் தேர்தலை நடாத்துவிப்பதில் முஸ்லீம்களும் தமிழர்களும் ஆர்வம் காட்டுவதால் தாங்கள் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்தி எல்லா இனங்களினதும் சனநாயகப் பங்களிப்பை ஊக்குவிக்கப் போவதாக அனைத்துலகிற்கு காண்பிக்கிறது.
மேலும் கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சிறிலங்காவில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறுபவர்களுக்கு எதிராகக் கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதற்கு கடும் எதிர்பபைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளமையை இலக்கு வரவேற்கிறது.
அதே வேளை இஸ்ரேலிய முன்னாள் மூத்த அதிகாரியும் பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான மொசே எலாட் இஸ்ரேயல் காமாசை முற்றாக ஒழிப்பதற்கு சிறிலங்கா தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிக்கக் கையாண்ட முறைகளைக் கையாள வேண்டுமென்று கடந்த வாரத்தில் “மாரிவ்” க்குக் கொடுத்த செவ்வியில் தெரிவித்து அது எத்தகையது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை கேட்கும் -வாசிக்கும் எவருக்கும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இனஅழிப்பு இலங்கையில் இடம்பெறவில்லை என உண்மைக்கு மாறாகப் பேசுவது தெளிவாகும். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவிவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் டொம் பிளச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பேசுகையில் மியான்மார் சிறிலங்கா ரூவாண்டா போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்ட பொழுது அம் மீறல்களின் அளவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை பேசத்தவறியது போல காசாவிலும் செயற்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளமையும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்ற உண்மையை உணர்த்துகின்றது.
மேலும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் 1972 மே 22 இல் ஈழத்தமிழர் அரசற்ற தேச இனமாக்கப்பட்டதால் அவர்கள் அனைத்துலக சட்டத்திற்கு ஏற்ப தன்னாட்சி மூலம் தங்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வை யும் வளர்ச்சிகளையும் ஏற்படுத்த உறுதி பூண்டனர். 53 ஆண்டுகாலமாக இதற்கான ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடக்கமாக 1976 மே 14 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் பண்ணாகம் மாநாட்டில் தன்னாட்சிப் பிரகடனத்தை ஈழத்தமிழரின் அரசியற் கொள்கையாக பிரகடனப்படுத்தினர். இந்த இரண்டு ஈழத்தமிழர் வரலாற்று நிகழ்வு நாட்களையும் மே மாதத்தில் நினைவு கூர்வதைத் தவிர்த்து வருகின்றனர். ஈழத்து அரசியல்வாதிகள் தமிழரசுக்கட்சி 1975 இல் சமஸ்டி கோரிக்கையைக் கைவிட்டு அரசற்ற தேசஇனமான ஈழத்தமிழினத்தின் தன்னாட்சிப் பிரகடனம் செய்ததுடன் தமிழரசுக்கட்சியின் வரலாறு முடிவடைந்ததையும் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்கோரிக்கை 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பண்ணாகம் மாநாட்டில் ஈழத்தமிழர் அரசியல் கொள்கையானதென்பதையும் மறைக்க முயன்று வருவது அவர்கள் இன்று தாம் நினைத்த தீர்வுகளை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கு மேற்கொள்வதற்கான நரித்தந்திரச் செயல் என்பது இலக்கின் கருத்து. இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்
னணியின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்காத் தூதுவரைக் கண்டு ஈழத்தமிழரின் சமகாலப்பிரச்சினைகளை எடுத்து ரைத்துள்ளார். தமிழ்த்தேசியப் பேரவைக்கூடாகத் தொடங்கப்பெற்ற தூதுவர்களைச் சந்தித்தல் என்பது தொடர்ச்சி யாக நடைபெறவேண்டுமென்பதை இலக்கு வலியுறுத்த விரும்புகிறது. ஏனெனில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசிடம் மட்டும் தொடர்புகளை மேற்கொள்கையில் ஈழத்தமிழரின் உள்ளக தன்னாட்சி உரிமையை சிறிலங்கா அனுமதிக்கிறது என்ற நிலை உறுதியாவதால் அனைத்துலக நாடுகளோ அமைப்புக்களோ ஈழத்தமிழரின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்களை அவர்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்த இயலாது சிறிலங்காவின் இறைமை தடுக்கும்.
மேலும் அனைத்துலக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் யூன் மாதத்தில் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் ஹரிணி அபேயசேகரா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதியைச் சந்தித்துள்ளார். தொடர்ந்து வடக்கில் காணிகளை அரச உடைமையாக்கும் பிரச்சினை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். இவ்வுரையாடலில் திருகோணமலை மாவட்டத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹோமச்சந்திரன் அவர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லா மாவட்டங்களிலும் காணிப்பிரச்சினைகள் உள்ள நிலையில் ஏன் வடக்கில் மட்டும் தமிழர்களின் கடற்கரையோரக் காணிகளை மையப்படுத்தி இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதென சுட்டிக்காட்டியதைத் தானும் ஆதரித்து வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற வேண்டுமென்று கூறியமையை இலக்கு பாராட்ட விரும்புகிறது. கட்சி வேறுபாடின்றி தமிழர் பிரச்சினைகள் அணுகப்பட இவரின் செயல் சிறந்த முன்னுதாரணமாகிறது.
மேலும் மாறிவரும் உலக அரசியலில் கடந்த வாரம் அமெரிக்க அரச அதிபர் ட்ரம்ப் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் ஆங்கிலமே அரச மொழியென அறிவித்துள்ளார். பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமரும் ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமெனவும் ஆங்கிலம் தெரியாதுவிட்டால் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஆங்கிலேய மக்கள் தாங்கள் அந்நியர்கள் உடைய தீவில் வாழ்வதாகக் கருதுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் பிரதமர் ஹரிணி அவர்கள் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை எல்லோரும் சிங்கள மொழியையும் தமிழ்மொழியையும் கட்டாயம் படிக்கக் கூடிய கல்வித்திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்பதும் இத்தகையதே. இந்நிலையில் தமிழ்த்தேசியப் பேரவை ஈழத்தமிழரின் அனைத்து சிவில் சமுகப் பிரதிநிதிகளையும் புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்களையும் இணைத்த ஈழத்தமிழர்களுக்கான பலம் பொருந்திய தேசிய பேரவையாகத் தன்னைக் கட்டமைத்தால் மட்டுமே இவற்றை எதிர் கொள்ளலாம் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்