சிங்களக் கட்சிகள் தீர்வைத் தராதன – தமிழரசுக் கட்சி இடித்துரைப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது சிறிலங்காவின் தென்பகுதி கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இருக்கப்போவதில்லை என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மூன்று வகையான கட்சிகள் இந்த மண்ணில் போட்டியிடலாம்.

ஒன்று தென்னிலங்கையைச் சார்ந்த பேரினவாத கட்சிகளின் அனுசரணையுடன் போட்டியிடுகின்ற கட்சிகள. இன்னும் ஒரு வகை கட்சி இந்த தென் இலங்கை கட்சிகளுக்கு வாக்குகளை சேர்த்து கொடுக்கின்ற அல்லது தென் இலங்கை கட்சிகள் எங்கள் மீது மேற்கொள்கின்ற இடர்கள் அல்லது துயர்களுக்கு பக்க பலமாக இருக்கின்ற கட்சிகள்.

மூன்றாவது வகை எமது கட்சியான தமிழரசு கட்சி. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முத்து பண்டாக்கள் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பது இல்லை. அதேபோன்று முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

அதாவது சிங்கள இனத்தை சார்ந்தவர்களும் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களும் ஒருபோதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை.ஆனால் முத்துலிங்கம் என்ன செய்வார் என்றால் முத்துலிங்கத்திற்கும் வாக்களிப்பார் முஸ்தபாக்கும் வாக்களிப்பார் முத்து பண்டாக்கும் வாக்களிப்பார்.
இந்த நாடு பொதுவாக இனவாத ரீதியாக பிரிந்து இருக்கின்ற நாடு. சமத்துவ அடிப்படையில் சிந்திக்காத ஒரு நாடு.

இவ்வாறு இருக்கின்ற போது எங்களுடைய வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது, தென்னிலங்கை சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள், நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு நின்றார்கள் – உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் எங்களோடு தான் நிற்கின்றார்கள் என்று அவர்கள் நாடாளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் குரல் கொடுப்பதற்கு இந்த தேர்தல் சாதகமாக அமைந்தால் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.

இந்த சபையை கைப்பற்றக்கூடிய ஆளக்கூடிய ஒரு கட்சியாக இருக்கக்கூடியது இலங்கைத் தமிழரசு கட்சியே என்று ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.