இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது என்பதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்ததாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இந்திய பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
13ஆம் திருத்தச் சட்டம் என்பது இரண்டு அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயமாகும்.
இந்தவிடயம் 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதனூடாக ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம் எனவும் அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இலங்கையில் அவ்வாறு செய்யப்படவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். எனவே, புதிய அரசியலமைப்பின் ஊடாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.



