இந்தியாவுடன் நேற்று (05) ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாட்டினதும் உள்நாட்டு சட்ட மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டதென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உடன்படிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தேவையான அமைச்சரவை அனுமதி முறையாகப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு உரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மிகவும் திறமையான மற்றும் உரிய முறைமையில் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூட்டுறவு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
அதேநேரம், குறித்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாயின் மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறியப்படுத்த வேண்டும் என்ற வகையிலும் தேவையேற்படின் மேலும் 3 ஆண்டுகளுக்கு அதனை நீடிக்க முடியும் என்ற அடிப்படையிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.



