தமிழ் சமூகத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்தாகியுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் முற்பகல் 9 மணிக்கு நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக இந்திய பிரதமரை வரவேற்றதுடன் இதன்போது, 19 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு சென்றிருந்ததுடன் அவருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கூட்டு ஊடக சந்திப்பு நடத்தப்பட்டதுடன் இதன்போது இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான கடன் தொகையினை மானியமாக இந்தியா மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருதரப்பு ‘கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்’ இலங்கை மக்களுக்கு உடனடி உதவி மற்றும் நிவாரணத்தை வழங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் நேற்று (05) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று பிற்பகல் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், ‘இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ‘ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றை கொண்ட வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது’ என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.



