அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது இலங்கை!

உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பதற்கான சலுகைகளை பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய வரியை எதிர்நோக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயாராகி வரும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
10 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கம்போடியா 49 சதவீத வரியையும், வியட்நாம் 46 சதவீத வரியையும், சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அது உலக வர்த்தக போருக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார். அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ‘வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான ஆரம்ப வழிகளை ஆராய்வதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை தடுக்கும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை கணிசமாக குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள இலங்கையின் மீட்பு பாதையை அமெரிக்காவின் புதிய வரி கட்டுப்படுத்தலாம் என்ற கவலை உள்ளதாகவும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய வரி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல உலக நாடுகள் தங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். வரி விதிக்கப்பட்டுள்ளவற்றில் பல நாடுகள் அமெரிக்காவிற்காக எதனையும் செய்வதில்லை. எனினும் அந்த நாடுகள் தற்போது அமெரிக்காவிற்காக எதனையும் செய்யும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.